டெல்லியில் 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: குழப்பத்தால் பயணிகள் கடும் அவதி

டெல்லியில் 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து: குழப்பத்தால் பயணிகள் கடும் அவதி

நாடு முழுவதும் இன்று உள்நாட்டு விமான சேவை தொடங்கிய போதிலும், பல்வேறு குழப்பங்கள் நிலவியதால் டெல்லி விமான நிலையத்தில் 80-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

நாடு தழுவிய பொது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், இன்றுமுதல் உள்நாட்டு விமான சேவையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கொல்கத்தா போன்ற மாநிலங்கள் முதலில் விமான சேவைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் விமான இயக்கத்திற்கு அனுமதி அளித்தனர்.

விமான சேவையில் முக்கிய பங்கு வகிக்கும் மும்பை விமான நிலையத்தில் தலா 25 விமானங்கள் தரையிறங்கவும், புறப்படவும் மட்டுமே மகாராஷ்டிர அரசு அனுமதி அளித்தது. மேலும் பல மாநிலங்கள் தானாகவே பல்வேறு வழிகாட்டுதல் நடைமுறைகளை வெளியிட்டது. இதனால் குழப்பம் நிலவியது.

இந்நிலையில் டெல்லியில் இருந்து நாட்டின் பல்வேறு இடங்களுக்கு செல்ல இருந்த 82 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் விமான நிலையத்திற்கு வந்திருந்த பயணிகள் குழப்பம் அடைந்தனர். கடைசி நிமிடம் வரை தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.

டெல்லியில் இன்று 125 விமானங்கள் புறப்பட்டு செல்ல இருக்கின்றன. அதேவேளையில் 118 விமானங்கள் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திலும் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் விமானிகள் விமான நிலையத்திற்கு வெளியே ஏமாற்றுத்துடன் காத்துக்கிடந்தனர்.

மும்பை விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த பெண் விமானி ஒருவர் கூறுகையில் ‘‘நாங்கள் டெல்லிக்கு செல்வதற்கு வந்திருந்தோம். நாங்கள் இங்கு வந்தபோது விமானம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்கள். விமான ஊழியர் ஒருவர் எங்களிடம் வந்து, ஒருவேளை இன்று இரவு விமானம் இயக்கப்படலாம் என்றார். ஆனால் இதுவரை உறுதி செய்யப்படவில்லை’’ என்றார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்ல இருந்த பயணி ஒருவர் ‘‘ஊரடங்கால் நாங்கள் கடந்த மார்ச் மாதம் 15-ந்தேதியில் இருந்து தமிழ்நாட்டில் சிக்கியுள்ளோம். மும்பை செல்ல மூன்று டிக்கெட்டுகளை பதிவு செய்தோம். ஆனால், இங்கே வந்தபோது, எங்களுடைய டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. யாரும் பதில் கூற மறுக்கிறார்கள்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan