காலில் வளையம், மர்ம எண்கள்: ரகசிய தகவல்களை அனுப்பவா? பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த புறா

காலில் வளையம், மர்ம எண்கள்: ரகசிய தகவல்களை அனுப்பவா? பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த புறா

காலில் வளையம் அமைத்து அதில் மர்ம எண்கள் குறியிடப்பட்ட புறா ஒன்று பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்து. அதை பிடித்து மக்கள் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர்.

ஜம்மு:

ஜம்மு காஷ்மீரில் இந்திய நிலைகளை ரகசியமாக கண்காணிக்க பாகிஸ்தான் முயற்சி செய்து வருகிறது. இதற்காக கேமரா பொருந்திய டுரோன்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், அவர்களது முயற்சியை இந்திய ராணுவத்தினர் முறியடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டம் ஷிலயரி என்ற கிராமத்தின் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை புறா ஒன்று வட்டமிட்டுக்கொண்டிருந்தது. 

பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள அந்த கிராமத்தின் அருகே பறந்த அந்த புறாவின் இறக்கைகளில் இளச்சிவப்பு நிற சாயம் பூசப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த கிராம மக்கள் சிலர் அந்த புறாவை பிடித்தனர். 

அப்போது பிடிபட்ட அந்த புறாவின் கால்களில் சிறு சிறு வளையங்கள் பொறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த வளையங்களில் சில எண்கள் எழுதப்பட்டிருந்தது. 

இதனால் இந்த புறா பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்டிருக்கலாம் என்றும், காலில் பொருத்தப்பட்டுள்ள வளையங்களில் உள்ள எண்கள் எதேனும் ரகசிய தகவல்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. மேலும், இந்த புறாவை பாகிஸ்தான் இந்திய எல்லைகளை உளவு பார்க்க பயன்படுத்துகிறதோ? என்ற கேள்விகள் எழுத்தொடங்கியது.

இதையடுத்து, பிடிபட்ட புறா தொடர்பாக கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலை தொடர்ந்து கத்துவா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிடிபட்ட புறாவை கைப்பற்றினர். 

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு படையினருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், புறா எங்கிருந்து வந்தது, அதன் காலில் பொருத்தப்பட்ட வளையங்கள் மற்றும் அதில் எழுதப்பட்டிருந்த எண்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் கத்துவா மாவட்ட போலீஸ் அதிகாரி ஷைலேந்திர குமார் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

இறக்கையில் வண்ணச்சாயம் பூசப்பட்டு, காலில் வளையங்கள் பொறுத்தப்பட்டு அதில் ரகசிய எண்களுடன் பிடிக்கப்பட்ட புறாவால் பாகிஸ்தான் உளவுபார்க்க பறவைகளை பயன்படுத்துகிறோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan