மகாராஷ்டிராவில் கரையை கடக்க தொடங்கியது நிசர்கா புயல்

மகாராஷ்டிராவில் கரையை கடக்க தொடங்கியது நிசர்கா புயல்

அரபிக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற நிசர்கா புயல், இன்று மும்பை அருகே உள்ள அலிபாக் பகுதியில் கரை கடக்கத் தொடங்கியது.

மும்பை:

அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று அது மேலும் வலுவடைந்து புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘நிசர்கா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. ‘நிசர்கா’ புயல் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியை நோக்கி நகர்ந்தது.

இன்று தீவிர புயலாக வலுப்பெற்று தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த நிசர்கா புயல், இன்று பிற்பகல் மகாராஷ்டிரா- தெற்கு குஜராத் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதாவது மும்பையில் இருந்து 94 கிமீ தொலைவில் உள்ள அலிபாக் அருகே கரைகடக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 11 மணிக்கு பிறகு அலிபாக் அருகே புயல் கரையை கடக்கத் தொடங்கியது. இதனால் கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. கனமழையும் பெய்கிறது. கிட்டத்தட்ட 2 மணி முதல் 3 மணி நேரத்திற்குள் புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

நிசர்கா புயலால் மகாராஷ்டிராவின் மும்பையும், கடலோர மாவட்டங்களும் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது. குஜராத்தை விட மகாராஷ்டிரா தான் அதிகம் பாதிக்கப்படும் என்றும் கூறி உள்ளது. இதனால் இரு மாநிலங்களிலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan