புதுக்கோட்டையில் சிறுமி நரபலி வழக்கு- பெண் மந்திரவாதி கைது

புதுக்கோட்டையில் சிறுமி நரபலி வழக்கு- பெண் மந்திரவாதி கைது

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் தலைமறைவான பெண் மந்திரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தில் தைல மரக்காட்டில் 13 வயதான வித்யா கொலை செய்யப்பட்ட வழக்கில், அதிரடி திருப்பமாக அவளது தந்தை பன்னீர் மற்றும் உறவினர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குடும்ப பிரச்சினை மற்றும் பணத்தேவைக்காக பெண் மந்திரவாதியின் பேச்சை கேட்டு, மகளை நரபலி கொடுத்ததாக போலீசாரிடம் பன்னீர் வாக்குமூலம் கொடுத்திருந்தார். பெற்ற மகளை தந்தை நரபலி கொடுத்தது போலீசாருக்கு மட்டுமில்லாமல், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைதான 2 பேரையும் போலீசார்  கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் போலீசார் தங்களது புலன் விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மந்திரவாதியான புதுக்கோட்டையை சேர்ந்த வசந்தி, அவருக்கு உடந்தையாக இருந்த முருகாயி ஆகியோர் மீது கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த பெண் மந்திரவாதி உள்பட 2 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் மந்திரவாதியான புதுக்கோட்டையை சேர்ந்த வசந்தி மற்றும் அவருக்கு உதவியாக இருந்த முருகாயி ஆகியோரை கைது செய்துள்ளனர். 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan