இங்கிலாந்து மந்திரி அலோக் சர்மாவுக்கு கொரோனா இல்லை

இங்கிலாந்து மந்திரி அலோக் சர்மாவுக்கு கொரோனா இல்லை

இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து வர்த்தக மந்திரி அலோக் சர்மாவுக்கு நடைபெற்ற பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

லண்டன்:

இங்கிலாந்து நாட்டில் பிரதமர் போரிஸ் ஜான்சன் மந்திரிசபையில் வர்த்தக மந்திரி பதவி வகிப்பவர் அலோக் சர்மா (வயது 52). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

நேற்று முன்தினம் அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் பெருநிறுவன திவால் மற்றும் ஆளுமை மசோதா மீதான விவாத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அடிக்கடி கைக்குட்டையால் தனது முகத்தை அவர் துடைத்துக்கொண்டார்.

அவர் அவதிப்படுகிறார் என உணர்ந்த எதிர்க்கட்சியான தொழில் கட்சியின் நிழல் வர்த்தக மந்திரி எட் மிலிபாண்ட், அவருக்கு ஒரு தம்ளர் தண்ணீர் கொடுத்தார். பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் வீட்டுக்கு திரும்பி விட்டதாக அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். அலோக் சர்மா, தன்னை வீட்டில் சுய தனிமைப்படுத்திக்கொண்டார். அவர் விரைவில் குணம் அடைந்து திரும்புவதற்கு நிழல் வர்த்தக மந்திரி எட் மிலிபாண்ட் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

இந்நிலையில் அலோக்க சர்மாவுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டில் முதலில் இளவரசர் சார்லஸ் அடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மீண்டு வந்தது நினைவுகூரத்தக்கது. இப்போது வர்த்தக மந்திரி அலோக் சர்மாவுக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை நடைபெற்றது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan