திருப்பதி கோவிலில் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்- முழு விவரம்

திருப்பதி கோவிலில் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்- முழு விவரம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 11-ந் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் மொட்டை போட முடியாது. வெளிமாநில பக்தர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற்றுச் செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

கொரோனா பரவலை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆனால் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், 5-வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது, 8-ந் தேதி முதல் கோவில்களை திறக்க பல்வேறு நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, வருகிற 8-ந் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக ஏழுமலையான் கோவில் திறக்கப்படுகிறது.

83 நாட்களுக்கு பிறகு 11-ந் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 8-ந் தேதியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். 8 மற்றும் 9-ந்தேதிகளில் திருமலை-திருப்பதி தேவஸ்தான நிரந்தர ஊழியர்கள், ஓய்வுபெற்ற தேவஸ்தான ஊழியர்களும், 10-ந்தேதி திருப்பதி, திருமலையில் வசிக்கும் உள்ளூர் மக்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

11-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் பொது தரிசனத்தில் அனைத்து மாநில பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதில் 65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்குட்பட்டோர் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. கொரோனா தொற்று அதிகமாக உள்ள சிவப்பு நிற மண்டலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை.

காலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.

திருப்பதி மலைப்பாதைகளில் அதிகாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணிவரை அரசு பஸ்கள், இதர வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தினமும் காலை 6.30 மணியில் இருந்து காலை 7.30 மணிவரை குறைந்த எண்ணிக்கையில் வி.ஐ.பி. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஒரு நாளில் மொத்தம் 7 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். (முன்பு ஒரு நாளைக்கு சுமார் 60 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்) ஒரு மணிநேரத்துக்கு 500 பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தவிர, பிற மாநில பக்தர்கள் தங்கள் மாநில அரசிடம் இருந்து இ-பாஸ் பெற்று வருவது கட்டாயம். அனைத்து பக்தர்களும் அலிபிரி சுங்கச்சாவடி பகுதியில் உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே திருமலைக்கு சாமி தரிசனத்துக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள். திருமலைக்கு வருவோர் கட்டாயம் முக கவசம், கையுறை அணிய வேண்டும்.

ரூ.300 டிக்கெட் பக்தர்கள், நேரம் ஒதுக்கீடு (டைம் ஸ்லாட்) டோக்கன் பெற்ற பக்தர்கள் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

பக்தர்கள் மொட்டை போட அனுமதி இல்லை. அலிபிரி நடைபாதையில் தினமும் 3 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே நடந்து வர அனுமதிக்கப்படுவார்கள். அலிபிரி நடைபாதை அதிகாலை 5 மணியில் இருந்து மாலை 3 மணிவரை திறந்து இருக்கும். அதற்கு மேல் மூடப்படும். கோவிலில் பக்தர்கள் 6 அடி தூர சமூக விலகலை கடைபிடித்து சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan