என் மீதான காழ்ப்புணர்ச்சியே தி.மு.க.வின் போராட்ட அறிவிப்பு- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை

என் மீதான காழ்ப்புணர்ச்சியே தி.மு.க.வின் போராட்ட அறிவிப்பு- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிக்கை

தங்களின் அராஜக போக்கை மறந்துவிட்டு என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தி.மு.க. போராட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

சென்னை:

தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா எனும் கொடிய நோயிலிருந்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற ஓய்வறியாது உழைத்து கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவரது அரசியல் செல்வாக்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் உயர்ந்து வருவதை கண்டு கதிகலங்கி வரும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடி, பொய்ப் பிரசாரங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

மக்களுக்கு என்னென்ன வசதிகளை செய்துதர முடியுமோ அவை அனைத்தையும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செய்து கொண்டிருக்கிறது. அவரின் சிறப்பை, தாங்க முடியாமல் மு.க.ஸ்டாலின் மனம் குமுறுகிறார். மதிமயங்கி பொய்யையும், புரட்டையும் பரப்ப முயற்சிக்கிறார். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சிகள் நிச்சயம் பலிக்காது.

உள்ளாட்சித்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்ற பின்பு தமிழக மக்களுக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக 123 தேசிய விருதுகளை பெற்று, உள்ளாட்சியில் சாதனை படைத்து, பாராட்டை பெற்றுள்ளதை கண்டு பொறுக்க முடியாமல், இமயம் போன்று உயர்ந்து நிற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் அரசியல் களத்தில் போட்டி போட முடியாமல், சாதரண விவசாய குடும்பத்தில் பிறந்த என்னோடு வெற்று அறிக்கை வாயிலாக மலிவு அரசியல் செய்கிறார் மு.க.ஸ்டாலின்.

கோவையில் காவல்துறையினரை தங்களது பணியை செய்யவிடாமல் தடுத்து அராஜக போக்குடன் குண்டர்களின் துணையுடன் வழக்குப்பதிவு செய்யப்பட்ட கைதியை விடுவித்து சென்றதால், சட்ட விதிகளின்படி கோவையில் தி.மு.க.வினர் சிலரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். அராஜகபோக்கில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கண்டிப்பதை விடுத்து, என்மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் தங்களது தவறை மறைத்து, மக்களை திசை திருப்பும் வகையில் நான் ரூ.3 ஆயிரம் கோடி ஊழல் செய்துவிட்டதாக மாபெரும் போராட்டத்தை கோவையில் நடத்துவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின்.

கோவை மாவட்டத்தில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களது பதவியை தக்க வைத்துக் கொள்ளவும், தி.மு.க.வின் தலைவரை திருப்திபடுத்தவும், சட்ட விதிகளை மதிக்காமல் அராஜகசெயல்களில் ஈடுபட்டு பொது மக்களுக்கு இடையூறாக செயல்படுகின்றனர். இது ஒன்றும் தி.மு.க.வினருக்கு புதிதல்ல. கோவையில் மட்டுமின்றி அரியலூர் பெண்கள் அழகு நிலையம், சென்னை பிரியாணி ஓட்டல் என பல நிகழ்வுகளில் தி.மு.க.வினரின் ரவுடிதனத்தை மக்கள் நன்கு அறிந்தவர்களே…

அ.தி.மு.க. என்றைக்கும் மக்களுக்கு தொண்டாற்றப் பிறந்த இயக்கம். கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளிலும் சுமார் 9 லட்சம் மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் தேங்காய், முட்டை உட்பட காய்கறிகள் அடங்கிய தொகுப்பும் வழங்கியிருக்கிறோம்.

ஆனால் தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு சொந்தமாக உதவ துப்பில்லாமல், அங்கொன்று இங்கொன்று வழங்கிவிட்டு புகைப்படம் எடுத்து தங்களை விளம்பர படுத்திக் கொண்டு கொரோனோ பணியில் ஈடுபடுத்திக் கொண்டதாக பொதுமக்களுக்கும், தி.மு.க.வின் தலைமைக்கும் தெரிவித்து நாடகமாடி மக்களை ஏமாற்ற முற்படுகின்றனர். இவர்களுக்கு உரிய நேரத்தில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan