மதுரையில் முதல்முறையாக கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை

மதுரையில் முதல்முறையாக கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை

மதுரையில் முதல்முறையாக கொரோனா நோயாளிக்கு பிளாஸ்மா சிகிச்சை தொடங்கப்பட்டு உள்ளது.

மதுரை:

கொரோனா வைரசை குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பிளாஸ்மா தெரபி என்ற சிகிச்சையை பரிந்துரை செய்தது. பிளாஸ்மா தெரபியில், கொரோனா வைரசிலிருந்து மீண்ட நோயாளியின் ரத்தத்தில் இருந்து எடுத்த நோய் எதிர்ப்பு திறனை பயன்படுத்தி கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது பிளாஸ்மா சிகிச்சை ஆகும்.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, ரத்த அணுக்களும் அதிகரிக்கிறது. கொரோனா வைரசை எதிர்த்து போராட உடல் தயாராகிறது. தமிழகத்திலும் இந்த முறையை சோதனை செய்வதற்கு ஒரு சில மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதில் மதுரை அரசு மருத்துவமனையும் ஒன்று. அதன்படி ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நோயாளிகளிடம் இருந்து பிளாஸ்மா பெறுவதற்கான முயற்சிகளில் மதுரை மருத்துவமனை நிர்வாகத்தினர் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேரிடம் இருந்து தலா 500 மி.லி. பிளாஸ்மா சேகரிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கியில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது மதுரையை சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார்.

அவருக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் இருந்ததை தொடர்ந்து அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்ய டாக்டர்கள் குழு முடிவு செய்து, அந்த முதியவரிடம் சம்மதம் வாங்கினர். இதனைத் தொடர்ந்து அவருக்கு 200 மி.லி. பிளாஸ்மா நேற்று உடலில் செலுத்தப்பட்டது. இதுபோல் மீண்டும் அவருக்கு நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதற்காக இந்த பிளாஸ்மா உடலில் ஏற்றப்பட இருக்கிறது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், மதுரையை சேர்ந்த 72 வயது முதியவருக்கு உடலில் பல பிரச்சினைகள் இருந்ததால் அவருக்கு கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்தது. இதனால் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க முடிவு செய்தோம். அதன்படி அவருக்கு முதல் கட்டமாக பிளாஸ்மா உடலில் ஏற்றப்பட்டுள்ளது. தற்போது அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். இருப்பினும் அவர் தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் இருப்பார். மதுரையில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்வது இதுவே முதல் முறை” என்றனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan