தொட்டியம் அருகே வெடி மருந்தை கடித்த சிறுவன் பலி- 3 பேர் கைது

தொட்டியம் அருகே வெடி மருந்தை கடித்த சிறுவன் பலி- 3 பேர் கைது

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே வெடி மருந்தை கடித்த சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொட்டியம்:

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள அலகரை மேற்கு பகுதியை சேர்ந்தவர் கங்காதரன்(வயது 32). இவரது தம்பி பூபதி(31). கூலித் தொழிலாளர்களான இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கங்காதரன் மற்றும் உறவினர் மோகன்ராஜ் உள்பட 5 பேர் மணமேடு காவிரி ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வெடி மருந்து குப்பிகளை வாங்கி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது 2 வெடிகளை வெடித்து மீன் பிடித்து விட்டு மீதமுள்ள 1 வெடி மருந்து குப்பியை வீட்டிற்கு கொண்டு வந்தனர். அதை வீட்டிற்கு வெளியே கட்டிலில் வைத்து விட்டு மீன் கழுவ சென்றுள்ளனர். அப்போது அங்கு விளையாடி கொண்டிருந்த பூபதியின் மகன் விஷ்ணுதேவ்(6), அந்த வெடி மருந்து குப்பியை தீனி என நினைத்து எடுத்து கடித்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக அது வெடித்தது. இதில், பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய விஷ்ணுதேவ் பரிதாபமாக இறந்தான்.

இதுபற்றி போலீசுக்கு தகவல் ஏதும் சொல்லாமல் சிறுவனின் உடலை அடக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து நேற்று தொட்டியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் அலகரை மேற்கு கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து வெடிமருந்தை கொடுத்ததாக பாப்பாபட்டியை சேர்ந்த செல்வக்குமார், அதை பயன்படுத்திய கங்காதரன், மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Maalaimalar

Author Image
murugan