எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்- இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்- இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்ரீநகர்:

பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதிகளை குறிவைத்து அவ்வப்போது அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. கடந்த சில தினங்களாக இந்த தாக்குதல் அதிகரித்துள்ளது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் எல்லைப்பகுதியில் எப்போதும் இந்திய ராணுவம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஜம்மு காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பல்வேறு ராணுவ நிலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக மஞ்சகோட் செக்டார், கெரி செக்டார், பாலக்கோட் செக்டார், கரோல் மைத்ரன் செக்டார்களில் சிறிய ரக மற்றும் கனரக ஆயதங்கள், மோர்ட்டார் ரக குண்டுகள் மூலம்  தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததாக ராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மஞ்சகோட் செக்டாரில் நடந்த தாக்குதலில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது தோள்பட்டையில் பாய்ந்த சிறிய தோட்டா அகற்றப்பட்டது.  அவரது உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan