டெல்லியில் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்த அமித்ஷா

டெல்லியில் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்த அமித்ஷா

டெல்லியில் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற அமித்ஷா, அங்கு கொரோனா சிகிச்சை முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார்.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்றைய நிலவரப்படி 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உள்ளனர். உயிரிழப்பும் 1300-ஐ கடந்து உள்ளது. எனவே மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனிக்கவனம் செலுத்தி கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். இதற்காக டெல்லி முதல்-மந்திரி, துணைநிலை கவர்னர் ஆகியோருடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்திய அவர், பல்வேறு அறிவிப்புகளையும் பின்னர் வெளியிட்டார். இதைப்போல டெல்லியில் உள்ள மாநகராட்சி அதிகாரிகளுடனும் தனியாக அவர் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் அரசு மருத்துவமனைக்கு நேற்று அவர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அங்கு கொரோனா சிகிச்சைக்காக மேற்கொள்ளப்பட்டு உள்ள முன்னேற்பாடுகள், அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை, குணமடைந்தோர் விவரம் உள்ளிட்டவற்றை மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்தார்.

டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

முன்னதாக அவர் டெல்லி மாநில அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பா.ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா, டெல்லியில் அரசியல் கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை மறந்து கொரோனாவை ஒழிக்கும் பணியில் கரம் கோர்த்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். கொரோனாவுக்கு எதிரான டெல்லி அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை கட்சித்தலைமை தொண்டர்கள் மூலம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இதன் மூலம் மக்களின் நம்பிக்கை வலுப்படும் எனவும், டெல்லியில் நிலைமை விரைவில் சீரடையும் எனவும் கூறிய அமித்ஷா, புதிய தீர்மானங்கள் மூலம் மாநிலத்தில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan