காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை 27-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்- அரசு தேர்வுத்துறை உத்தரவு

காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை 27-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்- அரசு தேர்வுத்துறை உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் பெற்ற காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை 27-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு மற்றும் பிளஸ்-1 விடுபட்ட பாடங்களுக்கான பொதுத்தேர்வு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட இருக்கிறது. அதன்படி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பின்வரும் அறிவுரைகளை பின்பற்றவேண்டும்.

* மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கான விடைத்தாள்கள், அசல் மாணவர் முன்னேற்ற அறிக்கைகள் மற்றும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ள அசல் மதிப்பெண் பதிவேடுகள் ஆகியவற்றை சேகரித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

* காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கு மாணவர்கள் வருகை புரியவில்லை எனில், அதனை தெரிவிக்க வேண்டும்.

* எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு 100 மதிப்பெண்களுக்கானதாகவும், அறிவியல் பாடத்துக்கு 75 மதிப்பெண்களுக்கானதாகவும் பதிவு செய்யவேண்டும்.

* பிளஸ்-1 வகுப்பில் வேதியியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு 70 மதிப்பெண்களுக்கானதாகவும், கணக்குப்பதிவியல் பாடத்துக்கு 90 மதிப்பெண்களுக்கானதாகவும் இருக்கவேண்டும்.

* எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுடைய ஒவ்வொரு பாட முகப்புத்தாளுடன் கூடிய விடைத்தாள்களையும் பாடவாரியாக அடுக்கிவைத்து, அதன்மேல் சம்பந்தப்பட்ட மாணவருடைய முன்னேற்ற அறிக்கையினை இணைத்திருக்கவேண்டும். அதேபோல் தான் பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுடைய வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் பாடங்களுக்கும் செய்யப்படவேண்டும்.

* இந்த ஆவணங்களையெல்லாம் வருகிற 22-ந்தேதி முதல் 27-ந்தேதி வரையிலான நாட்களுக்குள் மாவட்ட கல்வி அலுவலர் அறிவிக்கும் பள்ளியில் ஒப்படைக்கவேண்டும்.

* அரசுத் தேர்வுத்துறை கேட்டு இருக்கும் ஆவணங்களில் எவையேனும் இல்லையெனில், அதற்குரிய விளக்கத்தினை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எழுத்துப்பூர்வமாக மாவட்ட கல்வி அலுவலரிடம் தவறாமல் சமர்ப்பிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan