கொரோனாவால் பலியானவர்களின் உடல்கள் உள்ளன கூறி சவப்பெட்டிக்குள் போதைப்பொருள் கடத்தல்

கொரோனாவால் பலியானவர்களின் உடல்கள் உள்ளன கூறி சவப்பெட்டிக்குள் போதைப்பொருள் கடத்தல்

பிரேசில் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதாக கூறி சவப்பெட்டிக்குள் போதைப்பொருளை காரில் கடத்தி சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரியோ டி ஜெனிரோ:

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் நாடு பிரேசில்.

தற்போது வரை அந்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 47 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தினமும் சராசரியாக ஆயிரம் பேர் வரை வைரசால் மரணம் அடைகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டில் கொரோனாவால் பலியானவர்களின் உடல்களை கொண்டு செல்வதாக கூறி சவப்பெட்டிக்குள் போதைப்பொருள் கடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிரேசிலின் மடோ க்ராஹோ டி சுலா மாகாணத்தின் பொன்டா போரா என்ற பகுதியில் போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்தனர். 

அந்த காரின் டிரைவர் தான் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனையில் இருந்து உறவினர்களிடம் ஒப்படைக்கும் தனியார் அமைப்பில் வேலை செய்து வருவதாக தெரிவித்தார். மேலும், தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இரண்டு உடல்களை கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

அப்போது அந்த நபரிடம் தனது அடையாள அட்டையை காட்டும்படியும், உயிரிழந்தவர்களின் விவரங்களை காட்டும்படியும் போலீசார் தெரிவித்தனர்.

ஆனால், காரின் டிரைவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் இருந்த 2 சவப்பெட்டிகளை திறந்து பார்த்தனர்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் இருக்கும் என எண்ணிய போலீசார் அந்த இரண்டு சவப்பெட்டிகளிலும் சுமார் 290 கிலோ அளவுக்கு

போதை பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதாக கூறி காரில் போதைப்பொருட்கள் கடத்திய

கார் டிரைவரை கைது செய்தனர். 

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கடத்தல் சம்பவத்தில் ஈடுப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

கொரோனா காலத்திலும் வைரசுக்கு பலியானவரை கொண்டு செல்வதாக கூறி சவப்பெட்டிக்குள் போதை பொருள் கடத்திய சம்பவம் பிரேசிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan