லடாக் மோதலில் 40 வீரர்கள் இறந்ததாக கூறுவது பொய்யான தகவல்: சீனா

லடாக் மோதலில் 40 வீரர்கள் இறந்ததாக கூறுவது பொய்யான தகவல்: சீனா

இந்தியா – சீனா வீரர்கள் மோதலின்போது எங்கள் நாட்டைச் சேர்ந்த 40 வீரர்கள் மரணம் அடைந்தனர் என்ற தகவல் பொய்யானது என்று சீனா தெரிவித்துள்ளது.

லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த வாரம் திங்கட்கிழமை இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பேச்சுவார்த்தையின் மூலம் 10 பேர் விடுவிக்கப்பட்டனர்.

சீனா தரப்பில் 40-க்கும் (உயிரிழப்பு மற்றும் காயம்) மேற்பட்ட வீரர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று இந்திய ஊடகங்கள் உள்பட பல நாட்டின் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

இதற்கிடையில் இந்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே. சிங், ‘‘நாம் 20 ராணுவ வீரர்களை இழந்திருக்கும்போது, இரண்டு மடங்கிற்கும் அதிகமான சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்’’ என்று கூறியிருந்தார்.

இதை மேற்கோள்காட்டி சீனா வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியனிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு லிஜியான் பதிலளிக்கையில் ‘‘இந்தியா – சீனா ராணுவ மட்டத்திலும், டிப்லோமேட்டிக் மட்டத்திலும் பிரச்சினைகளை தீர்க்கின்றன.

இந்திய அதிகாரிகள் 40 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக சொன்னதாக இந்திய பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. அது பொய்யான தகவல் என்று என்னால் உங்களுக்கு பொறுப்புடன் கூற முடியும்’’ என்றார்.

கடந்த ஒரு வாரத்திற்குப்பின் உயிரிழப்பு குறித்து சீனா முதன்முறையாக வாய் திறந்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan