விவசாயிகளின் வேதனை குரல் முதலமைச்சர் காதுகளில் எட்டுமா? – முக ஸ்டாலின் கேள்வி

விவசாயிகளின் வேதனை குரல் முதலமைச்சர் காதுகளில் எட்டுமா? – முக ஸ்டாலின் கேள்வி

துன்பத்திலும், துயரத்திலும் வாடும் விவசாயிகளின் வேதனைக் குரல் முதலமைச்சரின் காதுகளுக்கு எட்டுமா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையைத் திறந்தும் இன்னும் கடைமடைப் பகுதிக்குக் காவிரி நீர் போய்ச் சேரவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.

கடைமடைக்குக் காவிரி நீர் வரவில்லை என்று டெல்டா விவசாயிகள் கதறுவதை முதலமைச்சர் இதுவரை கண்டு கொள்ளவும் இல்லை. தூர்வாரும் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு நிறைவேற்றாமல் அலட்சியமாக இருந்தது அ.தி.மு.க. அரசு. 

காவிரி டெல்டா விவசாயிகள், அ.தி.மு.க. அரசின் மெத்தனத்தால் அனைத்து வகையிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்; அதனால் வேதனைப்படுகிறார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் “விவசாயிகள் நீரேற்று சங்கம்” என்ற பெயரில் கிணறு வெட்டி, நீர்ப் பாசன வசதி செய்வதற்கு ஒரு விவசாயிக்கு 1.25 லட்சம் ரூபாய் வரை “மெகா” வசூல் செய்யப்படுவதாக ஓர் அதிர்ச்சித் தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த வசூல் அரசின் சார்பில் நடக்கிறதா? அரசு மட்டத்தில் இல்லாமல் அமைச்சர் பெயரில் நடக்கிறதா? என்ற சர்ச்சை நாமக்கல் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியிருக்கிறது. இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.

விவசாயிகளின் வேதனைக் குரல்கள் இதுவரை முதலமைச்சரின் காதுகளுக்கு எட்டவில்லை என்றாலும், தூர்வாரும் பணிகளைப் பார்வையிடக் காவிரி டெல்டாவிற்குச் செல்லும் நேரத்திலாவது இந்த வேதனைக் குரல்கள் எட்டும் என்று நம்புகிறேன்.

கடைமடைப் பகுதிக்கும் காவிரி நீர் செல்வதற்கு தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்தவும், விவசாயிகளுக்குத் தேவையான கடன் உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan