பஸ் பயணிகளிடம் கனிவுடன் பேசிய முதலமைச்சர்

பஸ் பயணிகளிடம் கனிவுடன் பேசிய முதலமைச்சர்

கோவை காந்திபுரம் சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்த பஸ் பயணிகளிடம் கனிவுடன் பேசினார். அப்போது அவர் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

கோவை:

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள், கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் அத்திக்கடவு-அவினாசி நீரேற்றம் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்கும், பில்லூர் 3-வது கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று கோவை வந்தார்.

சேலத்தில் இருந்து கார் மூலம் நேற்று காலை 10.30 மணியளவில் வந்த முதல்-அமைச்சர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தொடர்ந்து 3.30 வரை கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாப்பிட செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி திடீரென கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்துக்கு சென்றார்.

அங்கு அவரை கண்டதும் அங்கிருந்த பயணிகள் மிகுந்த ஆனந்தம் அடைந்தனர். அத்துடன் அவர்கள் முதல்- அமைச்சரை காண குவிந்தனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் பொதுமக்களை சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்று அறிவுறுத்தினர். பின்னர் பயணிகள் தங்களது செல்போனில் முதல்-அமைச்சரை புகைப்படம் எடுத்தனர். ஒரு சிலர் செல்பியும் எடுத்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து முதல் அமைச்சர் அங்கிருந்த பயணிகளிடம் கொரோனா காலத்தில் அரசின் நிவாரண பொருட்கள் முறையாக கிடைத்ததா? என்று கேட்டு அறிந்தார். அதற்கு அங்கிருந்தவர்கள் தங்கள் ஆட்சியில் எங்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை என்றும், அனைத்து நிவாரணங்களும் எங்களுக்கு கிடைத்தது என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எங்களுக்கு அனைத்து நிவாரண உதவி பொருட்களையும் வழங்கினார் என்றும் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து காந்திபுரத்தில் இருந்து உக்கடம் நோக்கி செல்ல தயாராக நின்றிருந்த பஸ்சில் முதல்-அமைச்சர் சர்வ சாதாரணமாக ஏறினார். பஸ்சில் ஏறியதும் சமூக இடைவெளியுடன் அமர்ந்து இருந்த பயணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டினார்.

தொடர்ந்து அவர்களிடம் கொரோனா நோய் மிகவும் கொடியது. இதை கட்டுப்படுத்த அரசு அதி தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நீங்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதுபோன்று கொரோனா தடுப்பு கேடயங்களை கடைப்பிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கனிவோடு கூறினார்.

தொடர்ந்து பஸ்சில் இருந்து கீழே இறங்கிய எடப்பாடி பழனிச்சாமி அங்கிருந்த ஒரு கடைக்கு சென்றார். அந்த கடையின் வெளியே தொங்க விடப்பட்டு இருந்த முகக்கவசங்களை தொட்டுப்பார்த்தார். பின்னர் அந்தக்கடைக்காரரிடம் அதன் விலை குறித்து கேட்டறிந்தார். அத்துடன் பொதுமக்கள் முகக்கவசங்கள் ஆர்வத்துடன் வாங்குகிறார்களா? என்பது குறித்தும் கனிவாக கேட்டறிந்தார்.

இதுதவிர கடையில் விற்பனை செய்யும் நீங்களும் கொரோனாவில் இருந்து தப்பிக்க அரசின் உத்தரவுகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் உடன் இருந்தனர். இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

முதல்-அமைச்சர் மிகவும் எளிமையாகவும், துணிச்சலாகவும் பொதுமக்கள் இடையே நேரடியாக சென்று கலந்துரையாடல் செய்தது அங்கிருந்தவர்களை மிகவும் நெகிழ்ச்சியடைய செய்தது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan