ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்? -சி.பி.எஸ்.இ பிரமாண பத்திரம் தாக்கல்

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்? -சி.பி.எஸ்.இ பிரமாண பத்திரம் தாக்கல்

ரத்து செய்யப்பட்ட சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகளுக்கு மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி:

நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது. பின்னர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டிருந்தது.

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி ஒரு மாணவரின் பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட சி.பி.எஸ்.இ. பொதுத் தேர்வுகளுக்கு வழங்கப்படும் மதிப்பெண் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

சி.பி.எஸ்.இ. 10, 12-ஆம் வகுப்பு  தேர்வுகளை எழுதி முடித்தவர்களுக்கு அதனடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும். 3 பாடங்களுக்கு மேல் தேர்வு எழுதியவர்களுக்கு, சராசரி கணக்கிடப்பட்டு அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் வழங்கப்படும். 

3 பாடங்களுக்கு மட்டும் எழுதியவர்களுக்கு, சிறந்த 2 பாடங்களின் சராசரியை கணக்கிட்டு அனைத்து பாடங்களுக்கும் மதிப்பெண் வழங்கப்படும்.

1 அல்லது 2 பாடங்களுக்கான தேர்வு எழுதியவர்களுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறு மதிப்பெண் வழங்கும் நடைமுறையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, இதனை செயல்படுத்தும்படி கூறி உள்ளது. ஜூலை மாத மத்தியில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan