ஜூன் 30-க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பா?: முதலமைச்சர் பதில்

ஜூன் 30-க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பா?: முதலமைச்சர் பதில்

ஜூன் 30-ந்தேதிக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற நிருபர்களின் கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

திருச்சி:

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கொரோனாவை தடுக்க உலக நாடுகள் திணறி வரும் சூழலில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசின்  நடவடிக்கைகளால் தமிழகத்தில் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக உள்ளது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை தமிழக அரசு சரியாக பின்பற்றி வருகிறது. ஊரடங்கால் கொரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 24,750 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இரண்டு கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

திருச்சி சிப்காட்டில் 250 ஏக்கரில் ரூ.200 கோடியில் தொழிற்பூங்கா ஏற்படுத்தப்படும். திருச்சியில் 6,128 சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.269 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது; மேலும் ரூ.200 கோடி வழங்கப்படும். திருச்சியில் தொழில் தொடங்க 5 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தைவான், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடிமராமத்து திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ. 498 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நபார்டு வங்கி நிதியுதவியுடன் பல்வேறு நீர் பாசன திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

ரூ.495 கோடியில் கொள்ளிடத்தில் புதிய கதவணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. முக்கொம்பில் தடுப்பணை கட்டும்பணி 40 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது நாங்கள்தான்.

ஜூன் 30-ம் தேதிக்குப்பின் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது பற்றி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசித்த பிறகு முடிவு செய்யப்படும். மருத்துவ நிபுணர் குழுவின் ஆலோசனை மற்றும் மத்திய அரசின் அறிவுறுத்தல்படி உரிய முடிவெடுக்கப்படும்.

கொரோனா தடுப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை.

இவ்வாறு அவர் பேசினார். 

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan