ஒரே நாளில் அரியானா, மேகாலயா, லடாக்கில் நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்

ஒரே நாளில் அரியானா, மேகாலயா, லடாக்கில் நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்

ஒரே நாளில் அரியானா, மேகாலயா மற்றும் லடாக்கில் இன்று நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

புதுடெல்லி:

இந்தியாவின் வட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன.  

இதற்கிடையே, அரியானாவின் ரோக்தக் நகர் அருகே இன்று பிற்பகல் 3.32 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவானது. அரியானாவில் கடந்த 3 நாட்களில் 2-வது முறையாக இன்று நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேகாலயாவின் துரா நகரில் இருந்து மேற்கே 79 கி.மீ. தொலைவில் இன்று மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.3 ஆக பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதேபோல், லடாக்கின் கார்கில் பகுதியில் இருந்து வடமேற்கே 200 கி.மீ. தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.5 ஆக பதிவானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரியானா, மகாராஷ்டிரா, மிசோரம், ஒடிசா, மேகாலயா, லடாக் மற்றும் சத்தீஸ்கர் என கடந்த 4 நாட்களுக்குள் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan