4 மாவட்டங்களில் இன்று தீவிர முழு ஊரடங்கு

4 மாவட்டங்களில் இன்று தீவிர முழு ஊரடங்கு

தீவிர முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்படுவதால், சென்னையில் நேற்று காய்கறி மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

சென்னை:

தமிழகம் முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்தாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 19-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேவேளை மளிகை கடைகள், மருந்தகங்கள், காய்கறிபழ கடைகள், பால் விற்பனை நிலையங்கள் பிற்பகல் வரை செயல்பட்டு வருகின்றன. அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக செல்வோர் மற்றும் உரிய அனுமதிச்சீட்டு (பாஸ்) பெறப்பட்ட வாகனங்கள் மட்டுமே சாலைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே சென்னை உள்பட 4 மாவட்டங்களில் எந்தவித தளர்வுகளும் இல்லாத தீவிரமான முழு ஊரடங்கு கடந்த 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தளர்வு இல்லா தீவிர முழு ஊரடங்கு இன்று  மீண்டும் கடைபிடிக்கப்படுகிறது.

இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கிலும் அனுமதிக்கப்பட்டிருந்த ஓட்டல்கள், துணிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள், அலங்கார பொருட்கள் விற்பனையகங்கள் என அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்படுகிறது. மளிகை கடைகளும், காய்கறிபழக்கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்படுகிறது. மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் நிலையங்கள் உள்ளிட்ட மிக அத்தியாவசமான இடங்கள் மட்டுமே செயல்படும்.

தீவிர முழு ஊரடங்கையொட்டி, தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கிவிடும் என்ற ஆவலால் சென்னையில் உள்ள காய்கறி மார்க்கெட்கள், மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. சாலையோர கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட்கள் முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து சமூக இடைவெளியை கடைபிடித்து வேண்டிய பொருட்களை வாங்கி செல்வதை பார்க்க முடிந்தது.

சென்னை திருமழிசை காய்கறி சந்தையில் நேற்று வியாபாரிகள் மற்றும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. ஆனால் மழைநீர் இன்னும் அப்புறப்படுத்தப்படாத நிலையில் மார்க்கெட் வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாய் காட்சியளித்தது. இதனால் சிரமத்துக்கிடையிலேயே மக்கள்-வியாபாரிகள் காய்கறி வாங்கி சென்றனர். வாகனங்கள் வந்து செல்வதிலும் சிரமங்கள் ஏற்பட்டன.

அதேபோல மாதவரம் பழ சந்தை வளாகத்திலும் ஆங்காங்கே பழங்கள் கொட்டப்பட்டிருப்பதால் வியாபாரிகள் சிரமம் அடைந்தனர்.

திருமழிசை போலவே நகரின் பிற பகுதிகளில், விளையாட்டு மைதானங்களில் அமைக்கப்பட்டிருக்கும் காய்கறி மார்க்கெட்களிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. திருமழிசை காய்கறி சந்தை, மாதவரம் பழ அங்காடிகள் இன்று செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

தீவிர முழு ஊரடங்கையொட்டி இன்று நகரின் சாலைகளில் இன்னும் போக்குவரத்து போலீசாரின் கெடுபிடியை காணலாம். முக்கிய சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகள் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட உள்ளன.

அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக செல்வோர், உரிய ஆவணங்களுடன் செல்வோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். விதிமுறைகள் மீறி பயணம் செய்வோருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், சமரசமின்றி அவர்களது வாகனங்களும் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan