80 முறை துவைத்து பயன்படுத்தும் பிபிஇ கிட் தயாரிப்பு- கோவை நிறுவனம் அசத்தல்

80 முறை துவைத்து பயன்படுத்தும் பிபிஇ கிட் தயாரிப்பு- கோவை நிறுவனம் அசத்தல்

மீண்டும் மீண்டும் துவைத்து பயன்படுத்தும் பிபிஇ பாதுகாப்பு உடைகளை கோவையைச் சேர்ந்த ஜவுளி தயாரிப்பு நிறுவனம் உருவாக்கி உள்ளது.

கோவை:

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பிபிஇ எனப்படும் முழு உடல் பாதுகாப்பு உடைகள் பாதுகாப்பு கேடயமாக விளங்குகின்றன. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் பிபிஇ கிட்களின் தேவைகளும் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் பிபிஇ கிட்கள், கையுறைகள் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்கான முக கவசங்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

குறிப்பாக பிபிஇ கிட்டுகளை ஒருமுறை கழற்றிவிட்டால் அதை மீண்டும் பயன்படுத்த முடியாது. வேறு உடைதான் அணியவேண்டும். இதனால் பிபிஇ கிட்டுகள் தொடர்ந்து தேவைப்படுவதற்கு முக்கிய காரணம் ஆகும்.

இந்த குறையைப் போக்கும் வகையில், மீண்டும் மீண்டும் துவைத்து பயன்படுத்தும் வகையிலான பிபிஇ உடையை கோவையைச் சேர்ந்த ஜவுளி தொழிற்சாலை உருவாக்கி உள்ளது. 80 முறை வாஷ் செய்து பயன்படுத்த முடியும் என்பது இதன் தனிச் சிறப்பு.

இதுபற்றி தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் கூறுகையில், ‘கிட்டத்தட்ட 80 முறை துவைத்தாலும் துணியில் குளோரின் ரீசார்ஜ் செய்யும் திறனை இந்த பிபிஇ கிட் கொண்டுள்ளது. இது தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தின் (சிட்ரா) ஆன்டிமைக்ரோபியல் சான்றிதழை பெற்றுள்ளது. 

பிபிஇ கிட் தயாரிப்பதற்காக நாங்கள் பயன்படுத்தி உள்ள துணியில் குளோரின் கிருமிநாசினி பண்புகள் உள்ளன. இந்த கிருமிநாசினியின் தன்மையானது, துணியின் மேற்பரப்பில் இரண்டு வாரங்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும். துவைக்கும்போது, துணியின் மூலம் குளோரின் மீண்டும் உறிஞ்சப்படுகிறது. முதலில் துவைக்கும்போது கிடைக்கும் இந்த பலன், கிட்டத்தட்ட 80 முறை துவைத்தபிறகும் கிடைக்கிறது’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan