கல்லெண்ணெய் – டீசல் விலை உயர்வுக்கு சோனியா காந்தி கடும் கண்டனம்

கல்லெண்ணெய் – டீசல் விலை உயர்வுக்கு சோனியா காந்தி கடும் கண்டனம்

கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி:

நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. கடந்த 3 வாரங்களில் 22 முறை பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.17 பைசாவும், டீசல் லிட்டருக்கு ரூ.11.14 பைசாவும் விலை அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வைத் திரும்பப் பெறக் கோரியும் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி காணொலி மூலம் பேசி பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது:

மக்களை ஒருபுறம் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பெரும் துன்பத்தில் ஆழ்த்துகிறது. மற்றொருபுறம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி அவர்களின் வாழ்க்கையை மேலும் சிரமத்தில் தள்ளுகிறது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் காலத்தில் பெட்ரோல், டீசல் மீது ஏற்றப்பட்ட விலையை உயர்வை மத்தியில் ஆளும் மோடி அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நானும், காங்கிரஸ் தொண்டர்களும் ஒன்றாகச் சேர்ந்து வலியுறுத்துகிறோம்.

கச்சா எண்ணெய் விலை குறைவின் பயன்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு சாமானிய மக்களுக்கு வழங்கவில்லை. பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தி ஆதாயம் அடைவதற்கும் , லாபம் சம்பாதிப்பதற்கும் இது நேரம் அல்ல. கடினமான சூழலில் பொதுமக்களை ஆதரிப்பதே அரசின் பொறுப்பு.

இந்த விலை உயர்வால் நாட்டில் உள்ள விவசாயிகள், ஏழைகள், உழைக்கும் மக்கள், நடுத்தரக் குடும்பத்தினர், சிறு வியாபாரிகள் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan