கொரோனா நோயாளிகளை கையாள்வதில் போதிய ஒருங்கிணைப்பு உள்ளதா?- உயர்நீதிநீதி மன்றம் கேள்வி

கொரோனா நோயாளிகளை கையாள்வதில் போதிய ஒருங்கிணைப்பு உள்ளதா?- உயர்நீதிநீதி மன்றம் கேள்வி

கொரோனா நோயாளிகளை கையாள்வதில் தமிழக சுகாதாரத்துறைக்கும், சென்னை மாநகராட்சிக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளதா? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை:

சென்னை ஈக்காட்டுதாங்கலை சேர்ந்தவர் ஆதிகேசவன் (வயது 74). கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து அவர் மாயமானார். இதுகுறித்து போலீசில், ஆதிகேசவனின் மகன் மணிவண்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் ஆதிகேசவனின் மற்றொரு மகன் துளசிதாஸ், தன் தந்தையை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஏற்கனவே சில உத்தரவுகளை போலீசுக்கு பிறப்பித்தது. காணாமல் போனவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், “காய்ச்சல் முகாமிலிருந்து ஒருவரை கண்டறிவது முதல் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்ப்பதுடன் தங்கள் எல்லை முடிந்துவிட்டது. அதன் பின்னர் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில்தான் ஒரு நோயாளி இருப்பார். இருப்பினும், மாயமான ஆதிகேசவனை அவரது குடும்பத்தினர் மற்றும் காவல்துறை போல தாங்களும் தேடி வருவதாக” கூறியிருந்தார்.

அப்போது நீதிபதிகள், கொரோனா நோயாளிகளை கையாள்வதில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளதா? தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எங்கெல்லாம் அழைத்து செல்லப்படுகிறார் கள்? எங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்? என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறதா? என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு மாநகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல் ராஜா ஸ்ரீனிவாஸ், “சுகாதாரத்துறைக்கும், மாநகராட்சிக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளது. நோயாளிகள் குறித்து பராமரிக்கப்படும் பதிவேடுகளை தாக்கல் செய்கிறேன். காணாமல் போன முதியவர் வேறு ஏதாவது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளாரா? என்பது குறித்தும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதுகுறித்து முழுமையாக விளக்கம் அளிக்க ஒருவாரம் அவகாசம் வேண்டும்” என்றார்.

இதையடுத்து விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan