இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு இன்று பிளஸ்-2 மறுதேர்வு

இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு இன்று பிளஸ்-2 மறுதேர்வு

பிளஸ்-2 பொதுத்தேர்வில் இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு இன்று மறுதேர்வு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 290 மையங்களில் இந்த தேர்வு நடக்க இருக்கிறது.

சென்னை:

பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் இறுதிநாள் (மார்ச் 24-ந்தேதி) தேர்வான வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகளில் சிலர் பங்குபெறமுடியவில்லை என்ற தகவல் வெளியானது. தேர்வை எழுத முடியாத மாணவர்களின் நலன்கருதி, மறுதேர்வு நடத்தப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி இறுதிநாள் தேர்வை எழுதாதவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) மறுதேர்வு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 290 மையங்களில் இந்த தேர்வு நடக்க இருக்கிறது. தேர்வை சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதவில்லை என்று ஆரம்பத்தில் தெரிவித்த நிலையில், தற்போது பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என சுமார் 700-க்கும் மேற்பட்டோர் மட்டுமே மறுதேர்வை எழுத இருப்பதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

தேர்வு முடிந்ததும், மறுதேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு மையத்துக்கு கொண்டு சேர்க்கப்படும். நாளை (செவ்வாய்க்கிழமை) மாணவர்களின் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், அதன் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan