கொரோனா தொற்றை விரைவில் கண்டறிய நவீன கருவி – இஸ்ரேலுடன் கைகோர்க்கும் இந்தியா

கொரோனா தொற்றை விரைவில் கண்டறிய நவீன கருவி – இஸ்ரேலுடன் கைகோர்க்கும் இந்தியா

கொரோனா தொற்றை விரைவாக கண்டறிய இஸ்ரேலுடன் இணைந்து இந்தியா நவீன கருவியை உருவாக்குகிறது. இதன்மூலம் 30 வினாடியில் முடிவு தெரியும்.

புதுடெல்லி:

கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்று, வேகமான பரிசோதனை முறை ஆகும். தொற்று பாதித்தவர்களை விரைவில் கண்டறிந்து, மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தினால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும். ஆனால் தற்போதைய நிலையில் பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

எனவே கொரோனா தொற்றை வேகமாக கண்டறிய நவீன கருவியை உருவாக்குவதில் மத்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்த பணிகளில் இஸ்ரேலிய நிபுணர் குழுவுடன் இணைந்து டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் பணியாற்ற உள்ளனர்.

இதற்காக இஸ்ரேலிய உயர்மட்ட நிபுணர் குழு ஒன்று சிறப்பு விமானம் மூலம் நேற்று டெல்லி வந்தது. அவர்கள் தங்கள் நாட்டில் உள்ள அதிநவீன கருவிகளையும் தங்களுடன் எடுத்து வந்தனர். இந்த நிபுணர்கள் இந்தியாவின் தலைமை விஞ்ஞானி விஜய் ராகவன் மற்றும் டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வுப்பணிகளை மேற்கொள்வார்கள்.

இந்த கருவி உருவாக்கப்பட்டால் 30 வினாடிகளில் கொரோனா தொற்றை கண்டறிய முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடியதாக இருக்கும் என இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரான் மால்கா தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan