நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உயர்நீதிநீதி மன்றம் முடிவு எடுக்கலாம்- சுப்ரீம் நீதிமன்றம் உத்தரவு

நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உயர்நீதிநீதி மன்றம் முடிவு எடுக்கலாம்- சுப்ரீம் நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்ததற்கு எதிராக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது சென்னை ஐகோர்ட்டு முடிவு எடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

புதுடெல்லி:

கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை மீண்டும் திறந்ததற்கு எதிராக வக்கீல் ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மதுக்கடைகளை மூடுமாறும், அரசு விரும்பினால் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு வீடுகளுக்கே நேரடியாக சென்று விற்பனை செய்யும் முறையை மேற்கொள்ளலாம் என்றும் கடந்த மே 8-ந்தேதி தீர்ப்பு கூறியது.

இதேபோன்ற மனு ஒன்றை விசாரித்த மதுரை ஐகோர்ட்டும், மதுக்கடைகளை மூடுவது தொடர்பாக மே 11-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.

சென்னை மற்றும் மதுரை ஐகோர்ட்டு தீர்ப்புகளுக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவுக்கு மே 15-ந் தேதி இடைக்கால தடை விதித்தது.

மேலும் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்வது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை, சமூக இடைவெளி உள்ளிட்டவை தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு கடந்த 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், டாஸ்மாக் மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை தமிழக அரசு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில், நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு காணொலி காட்சி மூலம் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தற்போது இந்த விவகாரம் தொடர்பாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது ஐகோர்ட்டே முடிவு எடுக்கலாம் என்றும், அந்த மனுக்கள் மீதான விசாரணை முடிவடையும் வரை ஐகோர்ட்டு தீர்ப்புக்கு மே 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த இடைக்கால தடை தொடரும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan