தடைக்கு அஞ்சி டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை விற்பனை செய்ய முடிவு – வாங்கும் முனைப்பில் மைக்ரோசாப்ட்

தடைக்கு அஞ்சி டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை விற்பனை செய்ய முடிவு – வாங்கும் முனைப்பில் மைக்ரோசாப்ட்

அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடை செய்யப்படலாம் என்பதால் அதன் செயல்பாட்டு உரிமத்தை விற்பனை செய்ய தாய்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், அதை மைக்ரோசாப்ட் வாங்க முனைப்பு காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன்:

தென்சீன கடல் விவகாரம், வர்த்தகப்போரில் தொடங்கிய அமெரிக்க-சீன மோதல் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உச்சத்தை அடைந்தது. வைரஸ் தொடர்பாக இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றச்சாட்டி வந்தனர்.

இந்த மோதலை மேலும் அதிகரிக்கும் வகையில் கொரோனா தடுப்பூசி தகவல்களை திருட முயற்சிப்பதாக சீனா மீது அமெரிக்கா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தியது. 

மேலும், அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் உளவு வேலையில் ஈடுபடுவதாக கூறி தூதரகத்தை உடனடியாக மூட உத்தரவிட்டது. ஹூஸ்டன் தூதரகம் மூடப்பட்ட சில நாட்களில் பதிலடி நடவடிக்கையாக வுகான் நகரில் அமெரிக்க தூதரகத்தை சீனா மூடியது. இதனால் இரு நாடுகௌக்கு இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், இந்தியா மேற்கொண்ட நடவடிக்கை போன்றே சீனாவின் டிக்டாக் செயலியை தடை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக  அதிபர் டிரம்ப் கூறுகையில், டிக்டாக்கை பொருத்தவரை அமெரிக்காவில் இந்த செயலியை தடைசெய்ய உள்ளோம். எனக்கு (அதிபர் டிரம்ப்) அதிகாரம் உள்ளது. ஒரு சிறப்பு உத்தரவை பிறப்பித்து டிக்டாக்கை தடைசெய்ய என்னால் முடியும்’ என தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் 80 மில்லியன் பயனாளர்களை கொண்ட டிக்டாக் மீதான தடை இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் டிக்டாக் தடையை செய்வதற்க்கு முன்னர் செயலியின் செயல்பாட்டு உரிமத்தை விற்றுவிட வேண்டும் என டிக்டாக்கின் தாய்நிறுவனமான சீனாவின் பைட் டான்ஸ் முடிவு செய்துள்ளது.

ஒருவேளை அமெரிக்காவில் டிக்டாக் செயலி மீது தடை விதிக்கப்பட்டால் பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவில் பல மில்லியன் டாலர்கள் நஷ்டம் ஏற்படும்.

இந்த நஷ்டத்தை தவிர்க்கும் விதமாக டிக்டாக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டு உரிமத்தை விற்பனை செய்ய பைட் டான்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக அமெரிக்காவில் பிரபல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியானது. 

அமெரிக்காவின் பிரபல நிறுவனங்கள் டிக்டாக் உரிமத்தை 50 மில்லியன் டாலர்கள் மதிப்பில் வாங்க முயற்சி மேற்கொண்டாலும், செயலியின் உண்மையான மதிப்பு மிக அதிகம் என கூறி உரிமத்தை விற்பனை செய்ய பைட் டான்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது.  

இந்நிலையில், டிக்டாக் செயலியின் அமெரிக்க உரிமத்தை வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்வந்துள்ளதாக

தகவல் வெளியாகியுள்ளது. 

டிரம்ப் நிர்வாகம் டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பதற்கு முன் அதன் அமெரிக்க செயல்பாட்டு உரிமத்தை மாற்றிவிட வேண்டும் என்ற 

நோக்கத்தோடு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் விற்பனை செய்ய பைட் டான்ஸ் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan