பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டி – புதிய கல்வி கொள்கையில் தகவல்

பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டி – புதிய கல்வி கொள்கையில் தகவல்

பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டியும் வழங்கப்பட வேண்டும் என்று புதிய தேசிய கல்வி கொள்கையில் கூறப்பட்டு உள்ளது.

புதுடெல்லி:

இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் குழு தயாரித்து வழங்கியுள்ள புதிய தேசிய கல்வி கொள்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளது.

கல்வி துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்த புதிய கல்வி கொள்கை வகை செய்கிறது. பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்கவும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தவும் சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது.

பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவேண்டும் என்றும் புதிய கல்வி கொள்கையில் சிபாரிசு செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஊட்டச்சத்து குறைவாலும், உடல் நல குறைவாலும் குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதன் மூலமும், அவர்களுடைய உடல் நலனை மேம்படுத்துவதன் மூலமும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.

எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் சத்துமிகுந்த காலை சிற்றுண்டியும் வழங்க வேண்டும். சூடான சிற்றுண்டி வழங்கமுடியாத இடங்களில் உள்ள பள்ளிகளில் சர்க்கரை கலந்த வேர்க்கடலை அல்லது சுண்டல், உள்ளூரில் கிடைக்கும் பழங்கள் ஆகியவற்றை வழங்கலாம். இதன்மூலம் அவர்களுடைய உடல் நலம் மேம்பட்டு கற்றல் திறன் அதிகரிக்கும்.

பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் அவர்களுக்கு உடல் பரிசோதனை நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மதிய உணவு திட்டத்தின் கீழ் 1 முதல் 8-வது வகுப்பு வரை படிக்கும் 11 கோடியே 59 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைவதாகவும், சில மாநில அரசுகள் தங்கள் சொந்த செலவில் அவர்களுக்கு பால், முட்டை, பழங்கள் போன்றவற்றை வழங்குவதாகவும் அந்த அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan