பொருளாதார கட்டமைப்பை அழித்த மோடி அரசின் 3 தவறுகள்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பொருளாதார கட்டமைப்பை அழித்த மோடி அரசின் 3 தவறுகள்- ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. தவறான அமலாக்கம், ஊரடங்கு ஆகிய மோடி அரசின் 3 தவறுகள், பொருளாதார கட்டமைப்பை அழித்து விட்டன என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி:

இளைஞர் காங்கிரஸ் நிறுவன தினத்தையொட்டி, வேலைவாய்ப்பின்மை குறித்து இளைஞர்கள் குரல் எழுப்புவதற்காக, ‘ரோஜ்கார் டு’ என்ற ஆன்லைன் பிரசாரத்தை இளைஞர் காங்கிரஸ் தொடங்கி உள்ளது.

அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மோடி பிரதமராக பதவி ஏற்றபோது, ஆண்டுதோறும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக கூறினார். அவர் காற்றை விற்பனை செய்தார். ஆனால், உண்மையில் பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளால் 14 கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர்.

தவறான கொள்கைகளே இதற்கு காரணம். பண மதிப்பிழப்பு, தவறாக ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியது, பொது முடக்கம் ஆகிய 3 தவறுகள், நாட்டின் பொருளாதார கட்டமைப்பை அழித்து விட்டன. இளைஞர்களுக்கு இந்தியாவால் வேலைவாய்ப்பு அளிக்க முடியாது என்பதுதான் இன்றைய உண்மை.

இளைஞர் காங்கிரசுக்கு நிறுவன தின வாழ்த்துகள். எல்லோரும் இந்த பிரசாரத்தில் இணைந்து, வேலைவாய்ப்புக்காக குரல் கொடுங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

இளைஞர் சக்திதான் நாட்டின் பலம். வேலைவாய்ப்பை அழிக்கும் கொள்கைகளை எதிர்க்கும்போது, நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது அவசியம். இன்றைய இளைய இந்தியாவின் தேவை, வேலைவாய்ப்பு.

இந்த பிரசாரத்தின் மூலம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் குரல் நாடு முழுவதும் பரவும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திக்விஜய்சிங், ரந்தீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan