அமெரிக்காவில் டிக்-டாக் செயலியை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் தோல்வி

அமெரிக்காவில் டிக்-டாக் செயலியை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் தோல்வி

அமெரிக்காவில் டிக்-டாக் செயலியை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தோல்வி அடைந்து விட்டதாக தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்:

சீனாவின் பைட்நடனம் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்-டாக் செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் தங்களை உளவு பார்ப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து செப்டம்பர் 15-ந் தேதிக்குள் பைட்நடனம் நிறுவனம் டிக்-டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்கவேண்டும் அல்லது டிக்-டாக் செயலிக்கு அமெரிக்காவில் முழுமையாக தடை விதிக்கப்படும் என்று டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்ட் மற்றும் ஆரக்கிள் ஆகிய நிறுவனங்கள் பைட்நடனம் நிறுவனத்திடமிருந்து டிக்-டாக் செயலியை வாங்குவதற்கான போட்டியில் மும்முரமாக இருந்தன.

இந்தநிலையில் டிக்-டாக் செயலியை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தோல்வி அடைந்து விட்டது. செயலியை வாங்குவதற்கான தங்களது முன்மொழிவை பைட்நடனம் நிறுவனம் நிராகரித்து விட்டதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “டிக்-டாக்கின் அமெரிக்க செயல்பாட்டு உரிமைகளை எங்களிடம் விற்க பைட்நடனம் நிறுவனம் மறுத்துவிட்டது. எங்களது முன்மொழிவு ஏற்கப்பட்டிருந்தால் டிக்-டாக் பயனாளிகளுக்கு நல்லதாகவும், அமெரிக்காவின் தேசிய நலன்களை பாதுகாக்கும் வகையிலும் இருந்திருக்கும்” எனக் கூறப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த தோல்வி டிக்-டாக் செயலியை ஆரக்கிள் நிறுவனம் கைப்பற்றுவதற்கு வழிவகுத்துள்ளது.

அதன்படி டிரம்ப் விதித்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில் டிக்-டாக் செயலியை வாங்குவதற்கான கடைசி நேர முயற்சிகளை ஆரக்கிள் நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் டிக்-டாக் செயலியை ஆரக்கிள் நிறுவனம் வாங்கிவிட்டதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன் மொழிவு நிராகரிக்கப்பட்டது குறித்தும், செயலியை ஆரக்கிள் நிறுவனம் வாங்கி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறித்தும் பைட் நடனம் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan