கொரோனா தடுப்பு மருந்தை வாய் வழியாக உள் இழுப்பதால் சிறந்த பலன் கிடைக்குமா? விஞ்ஞானிகள் ஆய்வு

கொரோனா தடுப்பு மருந்தை வாய் வழியாக உள் இழுப்பதால் சிறந்த பலன் கிடைக்குமா? விஞ்ஞானிகள் ஆய்வு

கொரோனா தொற்று சுவாசம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவதால் கொரோனா தடுப்பு மருந்தை ஊசி மூலம் செலுத்தாமல் வாய் வழியாக உள் இழுத்தால் சிறந்த பலன் கிடைக்குமா என விஞ்ஞானிகள் ஆய்வு தொடங்கி உள்ளனர்.

லண்டன்:

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதில் பல்வேறு நாடுகள் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. அந்தந்த நாடுகள் உருவாக்கிய தடுப்பூசிகள் பலகட்ட பரிசோதனைகளில் இருக்கின்றன.

இந்த நிலையில், கொரோனா தொற்று சுவாசம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவதால் கொரோனா தடுப்பு மருந்தை ஊசி மூலம் செலுத்தாமல் வாய் வழியாக உள் இழுத்தால் சிறந்த பலன் கிடைக்குமா? என இங்கிலாந்தை சேர்ந்த இம்பீரியல் கல்லூரி மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு தொடங்கி உள்ளனர்.

இந்த நிறுவனங்கள் தயாரித்த 2 தடுப்பூசிகளை 30 தன்னார்வலர்களுக்கு உள்இழுப்பான் (இன்ஹேலர்) மூலம் வாய்வழியாக செலுத்த முடிவு செய்துள்ளனர். இதில் சிறந்த பலன் ஏற்பட்டால், கொரோனா தடுப்பு மருந்து ஆய்வில் சிறந்த முடிவாக அது இருக்கும். ஏனெனில் ஊசியாக செலுத்துவதை விட, உள் இழுப்பதற்கு குறைவான டோஸ் மட்டுமே தேவைப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இது குறித்து இம்பீரியல் கல்லூரி ஆய்வுக்குழு தலைவர் கிறிஸ் சியூ கூறுகையில், ‘இன்புளூவன்சா தடுப்பு மருந்தை (தடுப்பூசி) நாசி ஸ்பிரே மூலம் உள் செலுத்துவதால் சிறந்த பலன் கிடைப்பதுடன், இந்த நோய் பரவுவதும் தடுக்கப்படுகிறது. இதைப்போல கொரோனா தடுப்பு மருந்தை செலுத்தும்போதும் சிறந்த பலன் ஏற்படும்’ என நம்பிக்கை தெரிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan