3 அரசு துறைகளின் 100 ஊழியர்கள் உழைப்பில் 10 நாளில் ரூ.1.20 கோடி செலவில் உருவான சட்டசபை

3 அரசு துறைகளின் 100 ஊழியர்கள் உழைப்பில் 10 நாளில் ரூ.1.20 கோடி செலவில் உருவான சட்டசபை

தமிழகத்தின் 3 அரசு துறைகளை சேர்ந்த 100 ஊழியர்களின் உழைப்பில் 10 நாட்களில் ரூ.1.20 கோடி செலவில் கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழக சட்டசபை கடந்த பல ஆண்டுகளாக சென்னை கோட்டையில் உள்ள மைய மண்டபத்தில் நடைபெற்று வந்தது. தற்போது கொரோனா பரவலை தவிர்ப்பதற்காக அதிக இடம் கொண்ட கலைவாணர் அரங்கின் 3-ம் தளத்தில் உள்ள பல்நோக்கு கூட்டரங்கத்தில் சட்டசபை அமைக்கப்பட்டுள்ளது.

கலைவாணர் அரங்கத்தில் சட்டசபையை அமைக்கலாம் என்ற தமிழக கவர்னரின் உத்தரவு கடந்த 1-ந் தேதி பிறப்பிக்கப்பட்டது. 2-ந் தேதியில் இருந்து அதற்கான பணிகள் தொடங்கின. இந்த பணியில் சட்டசபை செயலகம், பொதுப்பணித்துறை, செய்தித்துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள் மும்முரமாக செயல்பட்டனர்.

கலைவாணர் அரங்கத்தை உருவாக்கிய பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இன்னும் அரசுப் பணியில் இருப்பதால் அவர்களை இந்த பணிக்கு அரசு பயன்படுத்தி கொண்டது. அவர்களின் ஆலோசனைப்படி அந்த துறையின் சிவில், வானொலி, எலட்ரிக்கல் பிரிவினர் துரிதமாக செயல்பட்டனர்.

பொதுப்பணித்துறையை சேர்ந்த 20 பொறியாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். துணை ஒப்பந்தம் மூலமாகவும் சிலர் இந்த பணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். சட்டசபை செயலகத்தின் கட்டிடம், மசோதா பிரிவு அலுவலர்களும் அதிக அளவில் பணியாற்றினர்.

கோட்டை மைய மண்டபத்தில் உள்ள அமைப்பு போலவே 6 பிளாக்குகளுடன், 3 அடிக் கும் மேலாக இடைவெளிவிட்டு மேஜை, நாற்காலிகள் போடப்பட்டன. இவை ஏற்கனவே பொதுப்பணித்துறையிடம் உள்ளவைதான். மேஜை அலங்காரங்கள், ஒப்பந்தம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எம்.எல்.ஏ.க்களுக்கான நாற்காலிகளில், பெயர், இருக்கை எண் ஆகியவற்றை இருவேறு இடங்களில் தனித்தனியாக ஒட்டியுள்ளனர்.

கலைவாணர் அரங்கத்தில் சட்டசபைக்கு வெளியே அதிகாரிகள் பலருக்கும் உருவாக்கப்பட்டுள்ள அலுவலகங்களில் போடப்பட்டுள்ள மேஜை, நாற்காலிகள், வெளியில் இருந்து வாடகைக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கடந்த 2010-ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது கோட்டை மைய மண்டப சட்டசபையில் இருந்த தலைவர்களின் படங்களை மறுபதிப்பு செய்து உருவாக்கி பயன்படுத்தினர். எனவே தற்போது கலைவாணர் அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டசபையில், பெரும்பாலும் அப்போதிருந்த தலைவர்கள் படங்களின் மறுபதிப்பு படங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சட்டசபையின் தரைதளம் சமவெளியாக இருந்தது. ஆனால் அவற்றில் ஏற்ற இறக்கங்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும், சட்டசபை நடக்கும்போது, ஏ.சி. வசதியோடு வெளிக்காற்றும் உள்ளே வரும் வகையில் அனைத்து கதவுகளும் திறந்தே வைக்கப்பட்டுள்ளன.

2-ந் தேதியில் இருந்து 10 நாட்களாக 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு-பகலாக பணியாற்றி கலைவாணர் அரங்கத்தில் ரூ.1.20 கோடி செலவில் சட்டசபையை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan