கொரோனா பரிசோதனை முடிவை 5 நிமிடத்தில் தெரிவிக்கும் கருவி – சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடிப்பு

கொரோனா பரிசோதனை முடிவை 5 நிமிடத்தில் தெரிவிக்கும் கருவி – சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் ரிகோவர் என்ற சுகாதார நிறுவனத்துடன் சென்னை ஐ.ஐ.டி. இணைந்து கொரோனா பரிசோதனை முடிவை உடனுக்குடன் தெரிவிக்கும் கருவியை கண்டுபிடித்து இருக்கிறது.

சென்னை:

அமெரிக்காவும், இந்தியாவும் சேர்ந்து விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் புதுமைகளை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா-இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறக்கட்டளையை நிறுவியது.

அதன் மூலம் தற்போது அமெரிக்காவின் ரிகோவர் என்ற சுகாதார நிறுவனத்துடன் சென்னை ஐ.ஐ.டி. இணைந்து கொரோனா பரிசோதனை முடிவை உடனுக்குடன் தெரிவிக்கும் கருவியை கண்டுபிடித்து இருக்கிறது.

இந்த கருவியில் மனிதனின் சிலதுளி உமிழ்நீர் (எச்சில்) கொண்டு, அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா? இல்லையா? என்பது 5 நிமிடத்திலேயே தெரிந்துவிடும். மேலும் இந்த கருவி மிகக்குறைந்த செலவில் மிகத்துல்லியமாக கொரோனா பரிசோதனை முடிவை தெரிவிக்கும் என்று சென்னை ஐ.ஐ.டி.யின் உயிர் மருத்துவ என்ஜினீயரிங் துறை நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த கருவி, வெற்றிகரமாக செயல்பாட்டை நிரூபித்ததற்காக அமெரிக்கா கவுன்சிலின் விருதையும் பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இந்த கருவியை பெரிய அளவில் சந்தைப்படுத்துவது எப்படி? என்பது குறித்து அமெரிக்கா நிறுவனமும், சென்னை ஐ.ஐ.டி.யும் இணைந்து ஆலோசித்து வருகிறது.

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரிசோதனைகளும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி. கண்டுபிடித்திருக்கும் இந்த கருவி நடைமுறைக்கு வந்தால் கொரோனா பரிசோதனையை மிக விரைவில் செய்துவிட முடியும்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan