இந்திய ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 10 ஆயிரம் பேரை வேவு பார்க்கும் சீனா… அதிர்ச்சி தகவல்

இந்திய ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட 10 ஆயிரம் பேரை வேவு பார்க்கும் சீனா… அதிர்ச்சி தகவல்

இந்திய ஜனாதிபதி, பிரதமர்,எதிர்க்கட்சி தலைவர், ராணுவ தளபதி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட இந்தியாவை சேர்ந்த 10 ஆயிரம் பேரை சீனா வேவு பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி:

எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. லாடாக் மோதலையடுத்து எல்லையில் இந்திய-சீன வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த மோதலையடுத்து இந்தியாவில் செயல்பட்டு வந்த 100-க்கும் அதிகமான சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இதற்கிடையில், உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், ராணுவ தலைவர்கள், நிறுவனங்களை சீனா உளவு பார்ப்பதாக பல நாட்களாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. 

இந்நிலையில், சீனா உளவு பார்க்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா உள்ளதும் இதில் 10 ஆயிரம் இந்தியர்கள் இலக்காக உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில செய்தி நாளிதழான ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நடத்திய கள ஆய்வில் சீனாவை சேர்ந்த சேன்ஹூனா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இந்திய பிரதமர் நரேந்திரமோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த், எதிர்க்கட்சி தலைவர் சோனியா காந்தி, இந்திய தலைமை நீதிபதி பாப்டே, ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், பல்வேறு மாநில முதல்மந்திரிகள், எம்.பி.க்கள், மற்றும் இந்திய பெருநிறுவனங்களின் தலைவர்கள் உள்பட இந்தியாவின் 10 ஆயிரம் முக்கிய நபர்களை ரகசியமாக உளவு பார்ப்பது தெரியவந்துள்ளது. 

இந்த சேன்ஹூனா தகவல் தொழில்நுட்ப நிறுவனம் சீன கம்யூனிச அரசுடன் தொடர்பில் இருப்பதும் தெரியவந்தது.        

இந்த விவகாரம் தற்போது பூதாகாரமாகி வருகிறது. இந்திய தலைவர்களை சீன நிறுவனம் உளவு பார்ப்பது தொடர்பாக ராஜ்ய சபாவில் காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். 

மேலும், இது தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதால் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர், ஜனாதிபதி உள்பட இந்தியாவின் 10 ஆயிரம் பேரை சீன நிறுவனம் உளவு பார்ப்பதாக வெளியான தகவலையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த விசாரணையை தேசிய சைபர் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் நடத்த மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 

இந்த விசாரணையை 30 நாட்களுக்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் கேடு விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சீன நிறுவனம் வேவு பார்ப்பதாக வந்த தகவலையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சீனாவிடம் கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியாவின் தலைவர்களை சீனா வேவு பார்ப்பதாக வெளியான தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan