முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் மரணம் – தலைவர்கள் இரங்கல்

முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் மரணம் – தலைவர்கள் இரங்கல்

முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

முன்னாள் மத்திய மந்திரி ஜஸ்வந்த் சிங் (வயது 82). ராணுவ அதிகாரியாக இருந்து அரசியலில் நுழைந்தவர். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் நிதி, ராணுவம், வெளியுறவு துறைகளின் மந்திரியாக பதவி வகித்தவர், பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் விளங்கியவர்.

வாஜ்பாய்க்கும், முன்னாள் துணைப்பிரதமர் அத்வானிக்கும் நெருக்கமாக விளங்கியவர். 2014 நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு போட்டியிட கட்சி வாய்ப்பு தராதபோது, சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

அவர் 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வீட்டில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதில் இருந்து அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. பல முறை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். கடைசியாக கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி அவர் ராணுவ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தலையில் ஏற்பட்டிருந்த படுகாயத்தின் விளைவுகளுக்காகவும், தொற்றுக்காகவும் பல உறுப்புகள் செயலிழப்புக்காகவும் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று காலையில் இதயம் செயலிழந்ததால் அவர் மரணம் அடைந்தார்.

ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்-மந்திரிகள் மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்), அரவிந்த் கெஜ்ரிவால் (டெல்லி), அசோக் கெலாட் (ராஜஸ்தான்), அமரிந்தர்சிங் (பஞ்சாப்) மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், சசி தரூர், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட பல தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஜஸ்வந்த் சிங் மகன் மன்வேந்திர சிங்குடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, ஜஸ்வந் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். அப்போது அவர், “தனது இயல்புக்கு ஏற்ப ஜஸ்வந்த் சிங் தனது நோயை எதிர்த்து மிகுந்த தைரியத்துடன் கடந்த 6 ஆண்டுகளாக போராடி வந்தார்” என குறிப்பிட்டார்.

மரணம் அடைந்த ஜஸ்வந்த் சிங்குக்கு மனைவி ஷீத்தல் குமாரியும், மன்வேந்திர சிங் என்ற மகனும் உள்ளனர்.

ஜஸ்வந்த் சிங்கின் இறுதிச்சடங்குகள், ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நடந்தது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan