உத்தர பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் உயிரிழப்பு

உத்தர பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இனத்தை சேர்ந்த 20-வயதான இளம் பெண் தனது தாய் மற்றும் சகோதர்களுடன் வயல்வெளியில் தீவனம் சேகரிக்கும் வேலை செய்துகொண்டிருந்தார்.

சேகரிக்கப்பட்ட தீவனத்தின் ஒருபகுதியை அந்த இளம்பெண்ணின் சகோதரன் வீட்டிற்கு கொண்டு செல்ல அந்த பெண்ணின் தாய் வயல்வெளியில் சற்று தொலைவில் கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். 

அப்போது அங்குவந்த உயர்வகுப்பை சேர்ந்த 4 ஆண்கள் வயல்வெளியில் தனியாக கால்நடைகளுக்கு தீவனம் சேகரித்துக்கொண்டிருந்த அந்த இளம் பெண்ணை கடத்திச்சென்று கூட்டுப்பலாத்காரம் செய்துள்ளனர். 

மேலும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை பாதிக்கப்பட்ட பெண் வெளியில் சொல்லிவிடுவார் எனக்கருதிய அந்த கொடூர கும்பல் இளம்பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளது. இதில் அந்த இளம்பெண்ணின் கழுத்து பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

அந்த கும்பலின் தாக்குதலில் படுகாயம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண், ரத்த வெள்ளத்தில் வயல்வெளிப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். இதையடுத்து, ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் உடல்நிலை மோசமடைந்ததால் அந்த இளம்பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், கழுத்து, முதுகுப் பகுதிகளில் எலும்பு முறிவுகளுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.  இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 4 பேரை உத்தர பிரதேச காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து டெல்லியில் அந்த பெண் சிகிச்சைபெற்றுவந்த மருத்துவமனை பகுதியில் நேற்று போராட்டம் நடைபெற்றது. 

இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக தூக்கிலிடவேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் நடைபெற்றது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan