முக கவசம் அணியாதவர்களுக்கு கட்டாய பரிசோதனை- வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

முக கவசம் அணியாதவர்களுக்கு கட்டாய பரிசோதனை- வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணியாத நபர்களுக்கு கட்டாய பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று பல்வேறுத்துறையை சேர்ந்த அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழக அரசு பொது இடங்களில் முககவசம் அணியாத நபர்களுக்கு ரூ.200, சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்களுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும். மேலும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் முக கவசம் அணியாவிட்டாலோ, சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டாலோ அந்த கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கொரோனா தொற்று பாதித்த நபர்களின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே வந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று அரசாணை வெளியிட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாத நபர்களுக்கு உள்ளாட்சி அமைப்பினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

வேலூர் பழைய பஸ் நிலையம், மண்டித்தெருவில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் முக கவசம் அணியாத நபர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. ஆனாலும் பலர் முக கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்தனர். அதனால் தொற்று பாதித்த நபர்கள் மூலம் பிறருக்கு கொரோனா பரவும் அபாயம் காணப்பட்டது.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் முக கவசம் அணியாத அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் வேலூர் மண்டித்தெரு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்பட பல்வேறு இடங்களில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் முக கவசம் அணியாதவர்களுக்கு கட்டாய பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் வேலூர் பழைய மீன்மார்க்கெட் அருகே வருவாய்த்துறை, காவல் துறையினர் அடங்கிய குழுவினர் முக கவசம் அணியும்படி வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
murugan