பிரான்சில் அதிகரிக்கும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் – புதிதாக 25 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

பிரான்சில் அதிகரிக்கும் நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் – புதிதாக 25 ஆயிரம் பேருக்கு பாதிப்பு

பாரீஸ்:

பிரான்ஸ் நாட்டில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது.

நேற்று ஒரே நாளில் 30,621 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல், கொரோனாவால் உயிரிழந்தோர் 33 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

நிலைமை மோசமடைந்து வருவதாக எச்சரித்த பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஏதுவாக இன்று (சனிக்கிழமை) முதல் நாடு முழுவதும் 30 நாட்களுக்கு அவசர நிலை அமலில் இருக்கும் என தெரிவித்தார்.

அதேபோல், தலைநகர் பாரீஸ் உள்பட முக்கிய 8 நகரங்களில் இரவு 9 மணி முதல் அதிகாலை வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், இது 4 வாரங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், பிரான்சில் இன்று 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஒரே நாளில் 122 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை8.34 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 33 ஆயிரத்து 247 ஆக அதிகரித்துள்ளது.

பிரான்சில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கி உள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

Source: Maalaimalar

Author Image
murugan