விலையேற்றம் காரணமாக மீண்டும் இறக்குமதியான எகிப்து வெங்காயம்

விலையேற்றம் காரணமாக மீண்டும் இறக்குமதியான எகிப்து வெங்காயம்

விலை ஏற்றம் காரணமாக மீண்டும் எகிப்து வெங்காயம் தமிழகத்துக்கு இறக்குமதி ஆகி இருக்கிறது. சுவை இல்லாவிட்டாலும் அதனை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இல்லத்தரசிகள் இருக்கின்றனர்.

சென்னை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்லாரி வெங்காயம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) இறுதி வரை ஒரு கிலோ ரூ.50 என்ற நிலையில் தான் இருந்தது. ஆனால் இந்த மாதம் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாளும் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே இருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் மராட்டிய மாநிலம் நாசிக், ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து பல்லாரி வெங்காயம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அந்த பகுதிகளில் இருந்து வரத்து குறைந்ததன் காரணமாக அதன் விலை அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது விளைச்சல் குறைந்ததால் நாசிக்கில் இருந்து வெங்காயம் வரத்து குறைந்தது. ஆந்திராவில் விளைச்சல் முற்றிலும் இல்லாததால் அங்கிருந்து வரத்து சுத்தமாக இல்லை. தற்போது ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் (நாசிக் வெங்காயம்) ரூ.100 முதல் ரூ.115 வரை மொத்த சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் இதன் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவே பேசப்படுகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் விலை உயர்வை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு எகிப்து வெங்காயம் மீண்டும் களம் இறக்கப்பட்டு இருக்கிறது. எகிப்தில் இருந்து கப்பல் மூலம் தமிழகத்துக்கு சுமார் 140 டன் வரை வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தேவையை பொறுத்து இனிவரும் நாட்களில் எகிப்து வெங்காயத்தின் வரத்து இருக்கும் என்றும், எகிப்து வெங்காயத்தை தொடர்ந்து துருக்கி வெங்காயமும் அடுத்த வாரம் முதல் இறக்குமதி செய்யப்பட இருக்கிறது என்றும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது இறக்குமதி செய்யப்பட்டு இருக்கும் எகிப்து வெங்காயம் மொத்த சந்தையில் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை ஆகிறது. இந்தியாவில் விளையும் வெங்காயத்தின் விலையை விட எகிப்து வெங்காயம் விலை குறைவாக இருந்தாலும், அதன் சுவை மிகவும் குறைவாகவே தான் இருக்கும் என்று கடந்த ஆண்டே வியாபாரிகள் தெரிவித்தனர். சுவை இல்லாவிட்டாலும், சமையலுக்கு வெங்காயத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு இல்லத்தரசிகள் தற்போது தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

பல்லாரி வெங்காயத்தை போலவே, சாம்பார் வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.70 வரை விற்பனை ஆன சாம்பார் வெங்காயம், தற்போது ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. பல்லாரி வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழ்நாடு முழுவதும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டாலும், சாம்பார் வெங்காயத்தை பொறுத்தவரையில் மொத்த சந்தையில் என்ன விலைக்கு விற்பனை ஆகிறதோ? அதே விலையில் தான் விற்பனை ஆகிறது. எனவே பல்லாரி வெங்காயத்தை போலவே, சாம்பார் வெங்காயத்தின் விலையையும் கட்டுப்படுத்த அதன் விலையை குறைத்து பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan