பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி- எதிர்க்கட்சி மீது கடும் தாக்கு

பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி- எதிர்க்கட்சி மீது கடும் தாக்கு

ரத்து செய்யப்பட்ட 370-வது அரசியலமைப்பு பிரிவை மீண்டும் கொண்டு வருவோம் என்று சொன்ன பிறகுகூட எதிர்க்கட்சி துணிச்சலாக வந்து ஓட்டு கேட்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

சாசரம்:

பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டமாக நடத்தப்படுகிறது. வரும் 28ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பா.ஜ.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரத்தைத் தொடங்கினார்.  சாசரத்தில் உள்ள பியாதா மைதானத்தில் நடைபெற்ற நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

பீகார் மாநிலம் சமீபத்தில் இரண்டு மகன்களை இழந்துள்ளது. இறுதி மூச்சு வரை என்னுடன் இருந்தவரும், தனது முழு வாழ்க்கையையும் ஏழை மற்றும் தலித்துகளின் நலனுக்காக அர்ப்பணித்தவருமான ராம் விலாஸ் பஸ்வான் மறைவுக்கு எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இதேபோல் ஏழை மக்களுக்காக உழைத்த பாபு ரகுவன்ஷ் பிரசாத் சிங்கிற்கும் மரியாதை செலுத்துகிறேன். 

கொரோனா வைரசுக்கு எதிராக வலுவாக போராடிய பீகார் மக்களுக்கு எனது வாழ்த்துக்கள். பீகாரில் நோய்த்தடுப்பு பணிகளை விரைவாக செய்யாமல் இருந்திருந்தால், இந்த தொற்றுநோய் இன்னும் பலரை பலி வாங்கியிருக்கும்.

பீகார் மாநிலத்தில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியமைக்கும் என அனைத்து ஆய்வுகளும், கருத்துக் கணிப்புகளும் கூறுகின்றன. 

ஒரு காலத்தில் பீகாரில் ஆட்சி செய்தவர்கள் மீண்டும் வளர்ந்து வரும் மாநிலத்தை தங்கள் பேராசைக் கண்களால் பார்க்கிறார்கள். ஆனால், மாநிலத்தை பின்தங்கிய நிலைக்கு தள்ளியது யார்? என்பதை பீகார் மக்கள் மறந்துவிடக் கூடாது. அது மாநிலத்தில் மோசமான சட்டம் ஒழுங்கு நிலைமை மற்றும் ஊழல் இருந்த காலம். அவர்களை தங்களுக்கு அருகில் நெருங்க விடக்கூடாது என்ற தீர்மானத்தை வாக்காளர்கள் எடுத்துள்ளனர். கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் இன்னுயிரை இழந்த பீகார் வீரர்களின் பாதம் பணிந்து மரியாதை செலுத்துகிறேன்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அரசியலமைப்பின் 370-வது பிரிவை ரத்து செய்தது. ஆனால், ஆட்சிக்கு வந்தால் அதை மீண்டும் கொண்டு வருவோம் என்று அவர்கள் (எதிர்க்கட்சி) கூறுகிறார்கள். இதைச் சொன்ன பிறகுகூட அவர்கள் பீகாரில் இருந்து ஓட்டு கேட்க துணிகிறார்கள். இது நாட்டைப் பாதுகாக்க தனது மகன்களையும் மகள்களையும் எல்லைகளுக்கு அனுப்பும் பீகார் மாநிலத்தை அவமதிப்பது ஆகாதா?

வேளாண் சட்ட விவகாரத்தில் புரோக்கர்களையும் இடைத்தரகர்களையும் காப்பாற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் மண்டி மற்றும் எம்.எஸ்.பி. ஆகியவற்றை சாக்குபோக்காக சொல்கின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan