திருவண்ணாமலை தீப தரிசனத்துக்கு 28, 29-ந்தேதிகளில் வெளியூர் பக்தர்கள் வர அனுமதி இல்லை

திருவண்ணாமலை தீப தரிசனத்துக்கு 28, 29-ந்தேதிகளில் வெளியூர் பக்தர்கள் வர அனுமதி இல்லை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப தரிசனத்திற்கு வருகிற 28, 29-ந்தேதிகளில் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வர அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை :

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது.

இதுகுறித்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனா் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட காவல் துறை சூப்பிரண்டு அரவிந்த், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் மற்றும் பல்வேறு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை அடிப்படையாக கொண்டு தீபத்திருவிழாவின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தீபத்திருவிழாவின் போது தூய்மை பணி மேற்கொள்ளவது, குடிநீர் வசதி செய்வது போன்ற அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி வருகிற 3-ந்தேதி வரை கணினிமய நுழைவு சீட்டு மூலம் 5 ஆயிரம் பக்தர்களுக்கு கோவிலில் சாமி பார்வை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் கணினிமய நுழைவு சீட்டு எடுக்காத சுமார் 3 ஆயிரம் பக்தர்கள் சாமி பார்வை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

கோவிலில் வருகிற 3-ந்தேதி வரை தீபத்திருநாளான 29-ந் தேதியை தவிர்த்து காலை 6.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை 2 மணி நேரத்திற்கு ஒரு பிரிவு என்ற அடிப்படையில் 6 பிரிவுகளாக பக்தர்கள் சாமி பார்வை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அப்போது பக்தர்கள் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். சமூக இடைவெளியை பி்ன்பற்ற வேண்டும் என்ற நிபந்தனை வலியுறுத்தப்படும். கொரோனா காலம் என்பதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் சாமி தாிசனம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

திருவிழாவின் போது அவசர தேவைக்கு நகரத்தில் 15 உதவூர்தி வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தீபத்திருநாளான 29-ந்தேதி கோவில் வளாகத்தில் ஒரு உதவூர்தி மற்றும் ஒரு தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்படும்.

இந்த ஆண்டு தீபத்திருவிழாவிற்கு சிறப்பு பஸ் வசதி கிடையாது. வழக்கமாக மாட வீதியில் நடைபெறும் தேரோட்டம் இந்த ஆண்டு கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெறும். விழா நாட்களில் நடைபெறும் சாமி உலாவின் போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

வருகிற 28, 29-ந்தேதிகளில் திருவண்ணாமலை நகரத்தை சுற்றி 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளூர் மக்களை தவிர மற்றவர்கள் உள்ளே வராத வகையில் சோதனை செய்யப்படும். உள்ளூர் மக்கள் கண்டிப்பாக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.

வெளியூர்களில் இருந்து தீப தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. பேருந்துகளில் வெளியூர் மக்கள் அதிகளவில் வர வாய்ப்பு உள்ளதால் அந்த சமயத்தில் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 29-ந்தேதி மாலையில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். அதில் இருந்து தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் மகா தீபம் காட்சி அளிக்கும். வழக்கமாக மகா தீபம் காண மலையேற பக்தர்கள் அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு 11 நாட்களும் பக்தர்கள் மலையேற அனுமதி கிடையாது.

மேலும் 29 மற்றும் 30-ந்தேதி வரும் பவுர்ணமியன்றும் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி கிடையாது. விழா நாட்களில் காலை மற்றும் இரவில் 5-ம் பிரகாரத்தில் நடைபெறும் உலாவின் போதும், தெப்பல் உற்சவத்தின் போதும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

தீபத்திருவிழாவின் போது அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கும் இந்த ஆண்டு அனுமதி கிடையாது. தீபத்திருவிழாவை மக்கள் யுடியூப் மூலம் வீட்டில் இருந்தபடியே பக்தர்கள் காண கோவில் நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவல் தடுப்பு நடவடிக்கையாக இவ்வாறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan