வீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது – போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி

வீட்டில் கஞ்சா சிக்கியதால் நகைச்சுவை நடிகை கைது – போதை பொருள் தடுப்பு பிரிவு அதிரடி

அந்தேரி வீட்டில் கஞ்சா சிக்கியதை தொடர்ந்து நகைச்சுவை நடிகை பாரதி சிங்கை போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்தனர்.

மும்பை:

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து மும்பையில் இந்தி திரையுலகினர் மற்றும் போதைப் பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை ரியா சக்கரவர்த்தி தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

இதுதவிர தீபிகா படுகோனே, ரகுல் பிரீத்சிங், ஷரத்தா கபூர், சாரா அலிகான் உள்ளிட்ட முன்னணி நடிகைகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. சமீபத்தில் கூட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தயாரிப்பாளர் பிரோஸ் நாடிவாலாவின் வீட்டில் சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது மனைவியை கைது செய்தனர். இதேபோல பிரபல நடிகர் அர்ஜூன் ராம்பால் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று அந்தேரி லோகன்ட்வாலா பகுதியில் உள்ள பிரபல நகைச்சுவை நடிகை பாரதி சிங்கின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் இருந்து சிறிய அளவில் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

பாரதி சிங் கிலாடி 786, சனம் ரே உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்துள்ளார். பல டி.வி. நிகழ்ச்சிகளிலும், நகைச்சுவை நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார். சில டி.வி. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். 

இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், போதைப் பொருள் வி்ற்பனை செய்யும் கும்பலை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினோம். அப்போது நடிகை பாரதி சிங்கின் பெயரும் அடிபட்டது. இதையடுத்து அவரது வீட்டில் சோதனை நடத்தி உள்ளோம். அவரது வீட்டில் இருந்து சிறிய அளவில் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

வீட்டில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து பாரதி சிங் விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின் பாரதி சிங்கை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan