தமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தை 25-ந்தேதி புயல் தாக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தம் புயலாக மாறி தமிழகத்தை வரும் 25-ந்தேதி தாக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை:

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளது.

பின்னர் அது புயலாக மாறி வருகிற 25-ந்தேதி தமிழகத்தை தாக்கும் என்று டெல்லி வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனரான மிருத்யுசய் மொகபா கூறியிருப்பதாவது:-

தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி இன்னும் 2 நாட்களில் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறுகிறது. வருகிற 25-ந்தேதி (புதன்கிழமை) அன்று அது புயலாக மாறி தமிழகத்தை தாக்கும் சாத்திய கூறுகள் உள்ளன. புயலானது மாமல்லபுரம்- காரைக்கால் இடையே குறைந்த பலத்துடன் கரையை கடக்கிறது. அப்போது 50 கி.மீட்டரில் இருந்து 75 கி.மீ. வரையில் காற்று வேகமாக வீசக்கூடும்.

கடல் பகுதியில் 62 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

இதன் காரணமாக 25-ந்தேதி வரையில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காற்றழுத்த தாழ்வு பகுதி பற்றி தமிழக வானிலை மைய இயக்குனர் புவியரசனும் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் நோக்கி வர வாய்ப்பு இருப்பதாக கணித்துள்ளனர். இதனால் நாளை முதல் 25-ந்தேதி வரையில் பலத்த மழை பெய்யக்கூடும்.

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் நாளை மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும்.

நாகை, திருவாரூர், தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய அடைமழை (கனமழை)க்கும் வாய்ப்பு உள்ளது.

நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் நாளை மறுநாள் மிக பலத்த மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, சிவகங்கை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாட்டங்களிலும் பலத்த மழை முதல் மிக பலத்த மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னைக்கு அருகே 1020 கி.மீ. தூரத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காரைக்காலில் இருந்து 900 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு பகுதி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு ‘நிவர்’ என பெயர் சூட்டப்படுகிறது.

அடைமழை (கனமழை) எச்சரிக்கை காரணமாக அடுத்த 5 நாட்கள் தலைமை இடத்திலேயே தங்கியிருந்து மழை பாதிப்பு நிலவரங்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan