சென்னையில் 105 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரியில் கொட்டி தீர்த்த அடைமழை (கனமழை)

சென்னையில் 105 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரியில் கொட்டி தீர்த்த அடைமழை (கனமழை)

சென்னையில் 105 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரி மாதம் அதிக மழை பெய்ததில் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று இடைவிடாமல் அடைமழை (கனமழை) வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும். அந்த வகையில் வடகிழக்கு பருவமழை காலம் நிறைவு பெற்றதாக கூறப்பட்டாலும், கிழக்கில் இருந்து தொடர்ந்து காற்று வீசி வருவதால் பருவமழை இன்னும் நிறைவு பெறவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

அதன்படி, வருகிற 12–ந்தேதி வரை தமிழகத்தில் ஆங்காங்கே வடகிழக்கு பருவமழை தொடரும் என்றே தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என்று ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

ஆய்வு மையம் தெரிவித்தது போல் தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே மழை பெய்தது. ஓரிரு இடங்களில் அடைமழை (கனமழை)யும் பெய்தது. அந்தவகையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம் உள்பட சில மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் காலை வரை ஓரிரு இடங்களில் அடைமழை (கனமழை) வெளுத்து வாங்கியது.

குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலையில் இருந்தே மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல அடைமழை (கனமழை)யாக கொட்டியது.

சென்னை மற்றும் புறநகரின் முக்கிய பகுதிகளான எழும்பூர், அண்ணாநகர், கே.கே.நகர், கிண்டி, கோயம்பேடு, அண்ணாசாலை, பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பட்டினப்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராயநகர், ஆதம்பாக்கம், வேளச்சேரி உள்பட பல இடங்களில் இடைவிடாமல் மழை பெய்தது.

சில பகுதிகளில் சீராக மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அந்த இடங்களில் இருந்த தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. இதுபோல் சாலைகளின் இருபுறங்களிலும் தண்ணீர் தேங்கி இருந்தது. பல்வேறு இடங்களில் இருந்த சுரங்கப்பாதைகள் மழைநீரால் நிரம்பின. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சென்னையில் இடைவிடாமல் பெய்த மழையால் சில தெருக்களில் குளம்போல் மழைநீர் தேங்கியது. அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளங்களில் முழங்கால் அளவுக்கு சில இடங்களில் மழை நீர் சூழ்ந்து இருந்தது.

அதில் மோட்டார் மிதிவண்டி மூழ்கியபடி நின்றதையும் பார்க்க முடிந்தது. வீடுகளை சுற்றிலும் மழைநீர் வெள்ளக்காடாக காட்சியளித்ததால் பொதுமக்கள் பலரும் வீடுகளுக்குள் முடங்கி இருந்தனர்.

சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள். வாகனங்கள் தத்தளித்தபடி ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றன. பகல் நேரத்திலும் மழை காரணமாக கருமேகங்கள் சூழந்து இருந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதை பார்க்க முடிந்தது.

காலையில் அலுவலக பணிக்கு சென்ற பொதுமக்கள் பலரும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நனைந்தபடி சென்றனர். பல இடங்களில் தேங்கியிருந்த மழைநீரில் சென்ற மோட்டார் மிதிவண்டிகள் பழுதானதால், மீண்டும் அதனை இயக்க முடியாமல் தள்ளிச்சென்ற காட்சியும் அரங்கேறியது.

இன்று  காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரையிலான நிலவரப்படி, அதிகபட்சமாக தரமணியில் 11 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதற்கு அடுத்தபடியாக மீனம்பாக்கத்தில் 10 செ.மீ., தாம்பரம் 9 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம் 8 செ.மீ., வடசென்னை மற்றும் பூந்தமல்லி தலா 7 செ.மீ., நுங்கம்பாக்கம் 6 செ.மீ. உள்பட சில இடங்களில் குறைந்த நேரத்தில் அதிக மழை பதிவாகியிருந்தது.

பெரம்பூர்தொடர்வண்டித் துறை பாலத்தில் தேங்கி்க் கிடக்கும் மழைநீர்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (புதன்கிழமை) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை ஜனவரி மாதத்தில் பெய்த மழை அளவில் இன்று பெய்த மழைதான் அதிகம் என்று கூறப்படுகிறது. கடந்த 1915–ம் ஆண்டுக்கு பிறகு, ஜனவரி மாதத்தில் இன்று அதிகளவு மழை பெய்து இருக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, 105 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் அதிக அளவு மழை பதிவாகி உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடைவிடாமல் திடீரென்று மழை பெய்ததற்கான காரணம் குறித்து ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, சென்னைக்கு கிழக்கே வங்கக்கடலில் மிகப்பெரிய மேகத்திரள் கூட்டங்கள் ஒன்று கூடியதன் விளைவாகவும், கிழக்கில் இருந்து கீழ்நிலை காற்றும், மேற்கில் இருந்து மேல்நிலை காற்றும் ஒருசேர வீசியதன் விளைவாகவும் இடைவிடாமல் மழை வெளுத்து வாங்கியது. இதுபோன்ற நிகழ்வுகள் குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் தான் நிகழும். அந்தவகையில் இந்த நிகழ்வு ஏற்கனவே கணிக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் எந்த பகுதிகளில் மழை இருக்கும் என்பது தெரியாமல் இருந்தது. அது தற்போது சென்னையில் கொட்டி தீர்த்து இருக்கிறது என்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan