மத்திய படைகளின் தேவை குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனை

மத்திய படைகளின் தேவை குறித்து தேர்தல் கமிஷன் ஆலோசனை

தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் மத்திய படைகளின் தேவை குறித்து மத்திய அரசுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது.

புதுடெல்லி:

தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் மத்திய படைகளின் தேவை குறித்து மத்திய அரசுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியது. சமூக இடைவெளியை பின்பற்ற வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. எனவே, அம்மாநிலங்களில், வருகிற ஏப்ரல், மே மாதவாக்கில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஆயத்தப்பணிகளில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில், 5 மாநில தேர்தலில் மத்திய படை பாதுகாப்பு குறித்து மத்திய அரசுடன் தேர்தல் கமிஷன் நேற்று ஆலோசனை நடத்தியது. டெல்லியில், தேர்தல் கமிஷன் தலைமையகத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுடன் தேர்தல் கமிஷன் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

மத்திய படைகள் எவ்வளவு தேவை?, எவ்வளவு கிடைக்கும்? என்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தலால் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஓட்டுப்போட வேண்டிய வாக்காளர்கள் எண்ணிக்கையை தேர்தல் கமிஷன் குறைக்கும் என்று தெரிகிறது.

பீகார் மாநில சட்டசபை தேர்தலின்போது, இதேபோல், ஒரு வாக்குச்சாவடிக்கான வாக்காளர் எண்ணிக்கையை 1,200-க்கு பதிலாக, 1,000 ஆக குறைத்தது. அதன் விளைவாக, வாக்குச்சாவடிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியதாகி விட்டது.

எனவே, 5 மாநில தேர்தலிலும் வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப, தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan