இன்று மத்திய வரவு செலவுத் திட்டம் – நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

இன்று மத்திய வரவு செலவுத் திட்டம் – நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

மக்களவையில் இன்று மத்திய வரவு செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது. நிர்மலா சீதாராமன் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்கிறார்

புதுடெல்லி:

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெருந்தொற்றால், நாடு இதுவரை காணாத நீண்ட ஊரடங்கு, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு, தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, பொருளாதார பின்னடைவு மெல்ல மெல்ல மீண்டு வருகிறது.

இந்த தருணத்தில் 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டத்தை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார்.

இந்த வரவு செலவுத் திட்டம் காகிதமில்லா வரவு செலவுத் திட்டம் ஆகும். வரவு செலவுத் திட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது.

இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாக எழுந்துள்ள கேள்விகள் இவை:-

* கொரோனாவால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமா?

* பொருளாதார சரிவை மீட்டெடுக்கிற வகையில் அரசு திட்ட செலவினங்களை அதிகரிக்கும் வகையில் சுகாதாரம், உள்கட்டமைப்பு, ராணுவம் போன்றவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா?

* வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், கிராமப்புறங்களை மேம்படுத்தும் வகையில் செலவினங்கள் அதிகரிக்கப்படுமா?

* அன்னிய நேரடி முதலீடுகளை இன்னும் அதிகளவில் கவரக்கூடிய வகையில் விதிமுறைகள் எளிதாகுமா?

* சராசரி வரி செலுத்துவோர் கைகளில் பணப்புழக்கத்துக்கு வழி பிறக்குமா?

* வருமான வரியில் சலுகைகள் அறிவிக்கப்படுமா? வரி விகிதங்களில் மாற்றம் வருமா?

* கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பெயரால் கூடுதல் வரி (செஸ்) விதிக்காமல் இருப்பார்களா?

இப்படி கேள்விகள் நீளுகின்றன.

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் அரசு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி கண்டுபிடித்து, அவற்றை போடுகிற சூழல், ஒரு சிறப்பான எதிர்காலத்துக்கு நம்பிக்கை அளிக்கிறது.

இந்த தருணத்தில் நிலையான பொருளாதார மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் கொள்கை அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மத்திய வரவு செலவுத் திட்டம் பற்றி அக்குட் தர நிர்ணயம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், “உள்கட்டமைப்பில் பொது மற்றும் தனியார் முதலீடுகள் மூலம் குறிப்பிடத்தக்க உந்துதலை கொடுக்க வேண்டும். தொழில்துறை, சேவைகள், விவசாயத்துறை ஆகியவற்றில் பெரிய அளவிலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு உதவ வேண்டும். வரி வருவாயில் சமரசம் செய்து கொள்ளாமல், தனியார் நுகர்வுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் கல்வி துறையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும” என கூறியது.

பொருளாதார ஆராய்ச்சி பகுப்பாய்வாளர் கார்கிராவ், “வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தின் எதிர்பார்ப்புகள் முக்கியமாக உள்கட்டமைப்பு மேம்பாடு, முதியோருக்கு சலுகைகள், நுகர்வோர் பயன்பாடு அதிகரிக்க திட்டம், உள்நாட்டு உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan