கொரோனாவை கட்டுப்படுத்தியதில் தமிழக அரசு உலக சாதனை- ஆளுநர்  உரையில் பாராட்டு

கொரோனாவை கட்டுப்படுத்தியதில் தமிழக அரசு உலக சாதனை- ஆளுநர் உரையில் பாராட்டு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை:

தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்டம் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.

ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தை ஆளுநர் உரை நிகழ்த்தி தொடங்கி வைப்பது வழக்கம். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று சட்டசபை கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

கொரோனா முன் எச்சரிக்கை காரணமாக சட்டசபை கூட்டம், சட்டசபை வளாகத்திற்கு பதிலாக கலைவாணர் அரங்கில் நடந்தது.

பகல் 11 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது. அதற்கு முன்னதாக ராஜ்பவனில் இருந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலைவாணர் அரங்கத்திற்கு வந்தார்.

அவரை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் வரவேற்று அரங்கிற்கு அழைத்து வந்தனர்.

11.06 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து ஆளுநர் உரையை வாசித்தார்.

இன்று நாம் அசாதாரணமான முன்நிகழ்வுகள் அற்ற நிலையில் சந்திக்கிறோம். முன் எப்போதும் காணாத அளவில் மிக பரவலான ஒரு பெருந்தொற்று நோயால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 எனும் கொரோனா பெருந்தொற்று நோயை எதிர்கொள்வதற்கு அனைத்து அரசியல் எந்திரங்களையும் திறம்பட ஒருங்கிணைத்த பெருமையும், புகழும் முதல்-அமைச்சரை சாரும்.

உரிய நேரத்தில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டன. பெருந்தொற்று நோய் பரவலை தடுப்பதற்கு 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்திலும் போதிய அளவில் அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் தேவைக்கேற்ப படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

கொரோனா தடுப்பு பணிகள், காய்ச்சல் முகாம்கள் மூலம் நோய் கண்காணிப்பு, தொடர் பரிசோதனை மற்றும் நோய் தொற்றின் தடம் அறிதல் நடவடிக்கைகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டன.

சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தி மனிதவளங்களை அதிகரித்து பயனுள்ள சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டன.

ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை கருவிகள், மருத்துவ உபகரணங்கள், முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகள் மற்றும் தரமான மருந்துகள் போதிய அளவில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டன.

ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை முறையின் விலை, பிற பரிசோதனை முறைகளை விட அதிகமாக இருந்தாலும், அதன் உயர் தரத்தினைக் கருத்தில் கொண்டு, நாட்டிலேயே பிரத்யேகமாக ஆர்.டி.-பி.சி.ஆர் பரிசோதனை முறையை கையாண்ட ஒரே பெரிய மாநிலம் தமிழ்நாடாகும்.

நோயின் நிகழ்வை சரியாகக் கண்டறிவதையும், நோய்ப் பரவலை கட்டுப்படுத்துவதையும் இது உறுதி செய்துள்ளது.

கொரோனா நோயை எதிர்கொள்வது பொது சுகாதார உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளில் இந்த அரசு செய்த முதலீடுகள், பெரிய அளவில் பலன் அளித்துள்ளன.

சுகாதார உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, மருத்துவமனைகளிலும், கோவிட் பராமரிப்பு மையங்களிலும் கூடுதலாக 1 லட்சத்து 38 ஆயிரத்து 309 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆக்சிஜன் வசதிகள் கொண்ட 34 ஆயிரத்து 849 படுக்கைகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டன.

மேற்கூறிய நடவடிக்கைகள் வாயிலாக இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் இடையே மட்டுமல்லாது, உலக அளவில் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதிலும், உயிர் இழப்பைக் குறைப்பதிலும் தமிழ்நாடு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நோய்த் தொற்று மீண்டும் பரவுவதைத் தடுப்பதற்கான தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை முதல்- அமைச்சர் உறுதி செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கு முதல்-அமைச்சர், அனைத்து அமைச்சர்கள், அரசு எந்திரங்கள், குறிப்பாக சுகாதாரம், வருவாய், காவல், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஏனைய துறைகளில் முன்களப்பணியாளர்கள் இணைந்து ஓரணியாக அயராது உழைத்துள்ளதை நான் மனமாற பாராட்டுகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளதை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன். மாநிலம் முழுவதும் கோவிட் தடுப்பூசி திறம்பட வழங்கப்பட்டு வருகிறது.

முதல்கட்டமாக தொற்று நோய்க்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. அடுத்த கட்டமாக ஏனைய முன்களப் பணியாளர்களுக்கும் எளிதில் பாதிக்கக் கூடியவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்.

அனைத்து மக்களுக்கும், அரசு உரிய நேரத்தில் படிப்படியாக தடுப்பூசியை வழங்கும்.

இதனால் இயல்பான சமூக பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் முழுமையாக செயல்படத் தொடங்கும்.

கொரோனா பெருந்தொற்று மீட்புப் பணிகளில் அயராது உழைத்த சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளின் முன்களப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள், இந்த மாமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் மாநிலத்தின் அனைத்து குடிமக்களுக்கும் இத்தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களின் பங்களிப்பிற்காக, உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்து துறைகளிலும் முன்னிலை வகித்து வருவதால், நாட்டிலேயே சிறந்த நிர்வாகத்திறன் மிக்க மாநிலம் என்ற பாராட்டினை தமிழ்நாடு பெற்றுள்ளது.

பல்வேறு துறைகளின் சிறப்பான செயல்பாடுகளினால், தேசிய அளவில் ஏராளமான விருதுகளைப் பெற்று, வெற்றி நடைபோடுகிறது தமிழகம்.

முதல்- அமைச்சரின் தன்னிகரற்ற தலைமையின் கீழ், சிறப்பாக செயல்படும் அனைத்து அரசுத் துறைகளுக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு ஆளுநர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan