தஞ்சை அருகே தொடர் மழையால் பாதித்த பயிர்களை ஆய்வு செய்த மத்தியக்குழுவினர்

தஞ்சை அருகே தொடர் மழையால் பாதித்த பயிர்களை ஆய்வு செய்த மத்தியக்குழுவினர்

தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதியில் வயல்களில் அழுகி கிடக்கும் பயிர்களை பறித்து காட்டி விவசாயிகள் சேதம் குறித்து மத்திய குழுவினரிடம் விளக்கம் அளித்தனர்.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் புரெவி, நிவர் என அடுத்தடுத்த வந்த புயல்களால் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதில் இருந்து விவசாயிகள் மீள்வதற்குள் கடந்த ஜனவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பருவம் தவறி தொடர் மழை பெய்தது. இதில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. இதேபோல் நிலக்கடலை, எள், உளுந்து உள்ளிட்ட மற்ற பயிர்களும் சேதமடைந்தன.

இந்நிலையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட்டு கணக்கீடு செய்வதற்காக 2 குழுக்களை மத்திய அரசு நியமித்துள்ளது. அதில் ஒரு குழு தென் மாவட்டங்களையும், மற்றொரு குழு டெல்டா மாவட்டங்களையும் இன்று மற்றும் நாளை ஆய்வு செய்ய உள்ளது.

அதன்படி 2-வது மத்திய குழுவில் இடம் பெற்றுள்ள மீன்வள மேம்பாட்டுத்துறை ஆணையர் பால்பாண்டியன், மத்திய மின்சார ஆணையத்தின் உதவி இயக்குநர் ஷீபம்கார்க் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக மண்டல மேலாளர் ரணஞ்சேசிங் மற்றும் அதிகாரிகள் இன்று காலை புதுக்கோட்டை ஆய்வுக்குப்பின் தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதி காவாலிப்பட்டியில் ஆய்வு நடத்தினர். அப்போது விவசாயிகள் வயல்களில் அழுகி கிடக்கும் பயிர்களை பறித்து காட்டி சேதம் குறித்து விளக்கி வேதனையை தெரிவித்தனர். அப்போது தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உடன் இருந்தார்.

தொடர்ந்து பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, துறையூர் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்தனர்.

நாளை (5-ந்தேதி) காலை நாகை மாவட்டம், தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிர் பாதிப்பு குறித்து கணக்கீடு எடுக்கின்றனர். பின்னர் மதியம் கடலூர் மாவட்டத்துக்கு செல்கின்றனர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan