50 வயதை கடந்தவர்களுக்கு அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி – சுகாதாரத் துறை மந்திரி

50 வயதை கடந்தவர்களுக்கு அடுத்த மாதம் கொரோனா தடுப்பூசி – சுகாதாரத் துறை மந்திரி

கொரோனா தடுப்பூசி போடும் பணியின் மூன்றாவது கட்டம் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் 50 வயதைக் கடந்த 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, கொரோனா தடுப்பூசிகள் மற்றும் தடுப்பூசி போடும் பணி குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷவர்தன் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. முதலில் சுகாதார பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது. முன்கள பணியாளர்களுக்கு இந்த வாரத்தில் இருந்து போடப்பட்டு வருகிறது.

சுகாதார, முன்கள பணியாளர்கள் 3 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மூன்றாவது கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த மாதம் தொடங்குகிறது. அதில், 50 வயது மற்றும் அதை கடந்தவர்களுக்கும், இதர நோய்களால் பாதிக்கப்பட்ட 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். இப்பிரிவினரில் மொத்தம் 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

இப்பணி தொடங்கும் தேதியை இப்போதே துல்லியமாக சொல்ல முடியவில்லை. மார்ச் மாதத்தில் எந்த வாரத்திலும் பணி தொடங்கும். அனேகமாக, 2-வது, 3-வது அல்லது 4-வது வாரத்தில் தொடங்கும். தடுப்பூசி பணிக்கு வரவு செலவுத் திட்டத்தில் ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் மேலும் ஒதுக்கீடு செய்வதாக நிதி மந்திரி உறுதி அளித்துள்ளார்.

கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதுதவிர, 7 தடுப்பூசிகள் உருவாக்கும் பணி முன்னேறிய கட்டத்தில் இருக்கிறது. அவற்றில் 3 தடுப்பூசிகள், 3-ம் கட்ட மருத்துவ பரிசோதனையிலும், 2 தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளிலும், மற்றவை பரிசோதனைக்கு முந்தைய கட்டத்திலும் உள்ளன.

இந்தியாவிடம் கொரோனா தடுப்பூசி கேட்டு 22 நாடுகளிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. ஏற்கனவே 15 நாடுகளுக்கு மானியமாகவும், வணிக நோக்கத்திலும் கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளோம். மானியமாக 56 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும், வணிக நோக்கத்தில் 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் அளிக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan