சசிகலா விரைவில் மக்களை சந்திப்பார்- வக்கீல் பேட்டி

சசிகலா விரைவில் மக்களை சந்திப்பார்- வக்கீல் பேட்டி

அ.தி.மு.க. கொடியை சசிகலா பயன்படுத்தியது தவறா என்பதற்கு வக்கீல் விளக்கம் அளித்து உள்ளார். மேலும் அவர் விரைவில் சசிகலா மக்களை சந்திப்பார் என கூறியுள்ளார்.

பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் முடிந்த நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து நேற்று இளவரசி விடுதலை ஆனார். இதற்காக பெங்களூரு சிறைக்கு சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் சென்று இருந்தார். சிறையின் முன்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலை ஆகி உள்ளனர். சுதாகரனுக்கு அபராத தொகையை ஏற்பாடு செய்ய தாமதம் ஆகி உள்ளது. விரைவில் சுதாகரன் சார்பில் அபராத தொகை செலுத்தப்படும். அவரும் கூடிய விரைவில் விடுதலை ஆவார்.

சிறையில் இருந்து சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலை ஆன போது அவர்களுக்கு சிறை அதிகாரிகள் அளித்த நன்னடத்தை சான்றிதழில், 2 பேரின் செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளது என்று கூறியுள்ளனர். சசிகலாவும், இளவரசியும் சிறையில் தோட்ட வேலைகளை செய்வது மற்றும் கன்னடத்தை படித்து தேறி உள்ளனர். இதற்காகவும் அவர்களுக்கு சிறை நிர்வாகம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க.வின் கொள்கைகள் மற்றும் விதிகளில் அ.தி.மு.க. தொண்டர்கள் மட்டும் தான் கட்சி கொடியை பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படவில்லை. அ.தி.மு.க. பொது செயலாளராக சசிகலா சென்னை உயர்நீதிநீதி மன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தற்போது தான் சிட்டி சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் சசிகலா காரில் அ.தி.மு.க. கட்சி கொடியை கட்டி சென்றதும், அவர் அ.தி.மு.க கொடியை பயன்படுத்தியதும் தவறு இல்லை.

சசிகலா அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தியதால் என்ன சர்ச்சை உருவானது? ஆரம்பத்தில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் பார்த்து கொள்ளலாம் என்று கூறிய அமைச்சர்கள், தற்போது சசிகலா அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தியது பற்றி எதுவும் கூறவில்லை. சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் கட்சியில் இருந்து நீக்கியதாக யாரும் கூறவில்லை.

சசிகலா அ.தி.மு.க உறுப்பினர் அட்டையை புதுப்பிக்கவில்லை என்று கூறியுள்ளனர். அவர் சிறையில் இருக்கும் போது எப்படி இது முடியும்?. அரசியல் ரீதியான கருத்துகளுக்கு விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து சசிகலா விளக்கம் அளிக்க உள்ளார். அவர் விரைவில் மக்களை சந்திக்கவும் உள்ளார்.

சசிகலா அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தியதை பதற்றமாக எடுத்து கொள்ளாமல் அ.தி.மு.க.வினர் அதை பிரபலமாக எடுத்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க. பொது செயலாளர் தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும். உள்கட்சி பிரச்சினைக்குள் தேர்தல் ஆணையம் செல்லாது என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
murugan